இந்தியாவில் ஆன்லைன் கேப் புக்கிங் சேவைகளில் புதிய மாற்றத்தை உருவாக்கும் முயற்சியாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்திய "பாரத் டாக்ஸி" தற்போது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
டெல்லியில் பிப்ரவரி 5 அன்று தொடங்கப்பட்ட அரசு ஆதரவு பெற்ற இந்த டாக்சி செயலி, தனியார் நிறுவனங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார் அமித் ஷா. இந்த நிலையில் திங்கட்கிழமை கேப் டிரைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அமித் ஷா, "இந்த நிறுவனம் உங்களுக்கே சொந்தம்; ஆரம்ப மூன்று ஆண்டுகள் பொறுமையாக இருந்தால், லாபம் உங்களுக்கே திரும்பும்" என்று உறுதியளித்தார்.

கமிஷன் இல்லை, உறுப்பினர் கட்டணம் மட்டும்
தனியார் கேப் நிறுவனங்கள் ஒரு டிரிப் கட்டணத்தில் சுமார் 25-30% வரை கமிஷன் பிடித்துவிடுகின்றன என்ற டிரைவர்களின் குறைகளை தீர்க்கும் முயற்சியாக தான் "பாரத் டாக்ஸி" யோசனை வந்ததாக அமித் ஷா கூறினார். இந்த மாடலில் டிரைவர்கள் ரூ.500 மட்டும் உறுப்பினர் கட்டணமாக செலுத்தினால் போதும்.
கமிஷன் வசூல் இல்லை, சர்ஜ் பிரைசிங் இல்லை, கட்டணத்தில் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்பது அமித் ஷா-வின் முக்கியமான வாக்குறுதியாக உள்ளது. "உழைப்பவர் லாபம் பெற வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும்; ஆனால் வேறு யாரோ பணக்காரர்கள் ஆக கூடாது" என்றும் கேப் டிரைவர்களுடன் பேசும்போது தெரிவித்தார்.
லாபம் எப்படி பகிரப்படும்?
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனம் ரூ.25 கோடி லாபம் ஈட்டினால், அதில் 20% (ரூ.5 கோடி) கூட்டுறவு மூலதனமாக சேமிக்கப்படும். மீதமுள்ள 80% டிரைவர்கள் ஓட்டிய கிலோமீட்டர் அடிப்படையில் அவர்களுக்கே திருப்பி வழங்கப்படும். தற்போது நிலையான வாடகை வருமானம் கிடைக்கும் நிலையில், எதிர்காலத்தில் லாபப் பங்கும் கிடைக்கும் அமைப்பு உருவாக்கப்படுகின்றது. "இப்போது நீங்கள் ஓட்டுநர்கள்; ஆனால் உண்மையில் பாரத் டாக்ஸி உரிமையாளர்கள் நீங்கள்தான்" என்பது இந்த மாடலின் அடிப்படையாகும்.
அமுல் - நாபார்ட் போன்ற கூட்டுறவு முறை
இந்த திட்டம் Amul, Indian Farmers Fertiliser Cooperative Limited மற்றும் National Bank for Agriculture and Rural Development போன்ற முன்னணி கூட்டுறவு நிறுவனங்களின் வர்த்தக மாடலை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. கூட்டுறவு அமைப்பின் மூலம் டிரைவர்கள் உரிமையாளர்களாக செயல்படுவது, இந்தியாவில் கேப் துறையில் புதிய மாடலாக பார்க்கப்படுகிறது.
அடுத்த 3 ஆண்டுகள்
தேசிய அளவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பெரும்பாலான மாநிலங்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, பயனர் நம்பிக்கை ஆகியவை முக்கியமானவை. சந்தை ஏற்கனவே போட்டி நிறைந்த நிலையில் இருந்தாலும், கூட்டுறவு உரிமை முறை டிரைவர்களுக்கு நீண்டகால நன்மை தருமா என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும்.
மொத்தத்தில், "பாரத் டாக்ஸி" ஒரு சாதாரண கேப் அப் அல்ல; டிரைவர்களை உரிமையாளர்களாக மாற்றும் கூட்டுறவு பொருளாதார முயற்சி. இது வெற்றி பெற்றால், இந்தியாவின் டிஜிட்டல் போக்குவரத்து துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications