டெல்லி: இந்தியாவில் ஃபின்டெக் எனப்படும் நிதி மற்றும் தொழில்நுட்பம் ஒன்றிணைந்த டிஜிட்டல் தளங்களில் வளர்ச்சி கவனிக்ககூடிய வகையில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் டிஜிட்டலை நோக்கி நகர்வதும், புது புது செயலிகளும் வசதிகளும் உருவாவதுமே இதற்கு காரணம். அந்த வகையில் விரைவில் மருத்துவ சிகிச்சைகளுக்கான கடன் வழங்கும் ஒரு செயலி வெளி வர இருக்கிறது.
பாரத் பே நிறுவனத்தின் துணை நிறுவனரும் முன்னாள் மேலாண்மை இயக்குனருமான அஷ்னீர் க்ரூவர் ஃபின்டெக் துறையில் மற்றொரு புரட்சியை செய்வதற்காக தயாராகி வருகிறார். அஷ்னீர் க்ரூவர் மருத்துவ சிகிச்சைக்கான கடன்களை வழங்கக்கூடிய ஸீரோபே (Zerope) என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.

இந்த செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. தற்போது பரிசோதனையில் இருக்கக்கூடிய இந்த செயலியானது தி தேர்ட் யூனிகார்ன் என்ற நிறுவனத்தால் டெவலப் செய்யப்பட்டு வருகிறது என கூகுள் பிளே ஸ்டோர் தெரிவித்துள்ளது.
பாரத் பே நிறுவனத்தில் இருந்து விடைபெற்ற பிறகு அஷ்னீர் க்ரூவர், தனது மனைவியுடன் இணைந்து தி தேர்ட் யூனிகார்ன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதுமட்டுமின்றி கிரிக்பே என்ற ஒரு பேண்டஸி விளையாட்டு தளத்தையும் 2023 ஆம் ஆண்டு அவர் தொடங்கினார்.
தற்போது ஸீரோபே செயலியில் அஷ்னீர் க்ரூவர் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்த நிறுவனம் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவர் கடன்கள் அதாவது முன் அனுமதி பெற்ற மருத்துவ கடன்களை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடிய வங்கி அல்லாத நிதி நிறுவனம் முக்குத் ஃபின்வெஸ்ட்டோடு இணைந்து ஸீரோபே செயலி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பார்ட்னராக இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த செயலி மூலம் 5 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும்.
க்ரூவர் ட்ரீம் லெவன் நிறுவனத்துக்கு போட்டியாக கிரிக் பே என்ற தளத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் சுமார் 3.5 மில்லியன் டாலர்களை முதலீடாக திரட்டியது.குறிப்பாக இசட்.என். எல் கிரோத் ஃபண்ட் ,விவேக் வென்ச்சர் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ரியாசு எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இதில் நம்பிக்கையுடன் முதலீடு செய்தன.
தற்போது இந்தியாவில் மருத்துவத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த தொழில்கள் என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் நோயாளிகளின் உடல் நலனை பராமரிப்பதற்கான செயல்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளிட்டவற்றை ஒருங்கே வழங்கக்கூடிய செயலிகளுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகம். இந்தியாவில் சுகாதார பராமரிப்புக்கான டிஜிட்டல் சந்தை என்பது 2030 ஆம் ஆண்டில் சுமார் 37 பில்லியன் டாலர்கள் வருவாயை ஈட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications