மும்பை: தொலைதொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய பாரதி ஏர்டெல் நிறுவனம் சந்தை மூலதனம் அடிப்படையில் 100 பில்லியன் டாலர்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே 100 பில்லியன் டாலர்கள் சந்தை மூலதனம் கொண்ட நிறுவனங்களாக இருந்தன. தற்போது ஏர்டெல்லுய்ம் அதில் சேர்ந்துள்ளது.
ஜூன் 10ஆம் தேதி மும்பை பங்குச் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பானது 8.55 லட்சம் ரூபாய் என்ற அளவில் இருந்தது. இதனை எடுத்து பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் சற்றே உயர்வு கண்டன. ஒரு பங்கின் மதிப்பு 0.53 % உயர்ந்து ரூ.1432.80 க்கு வர்த்தகமானது.

நடப்பு ஆண்டில் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸை விட பாரதி ஏர்டெல் நிறுவனமானது முதலீட்டாளர்களுக்கு 42 % லாபத்தை பெற்று தந்துள்ளது. ஓராண்டு காலத்தில் சென்செக்ஸ் மதிப்பு 22% உயர்ந்திருக்கும் நிலையில் பாரதி ஏர்டெல்லின் மதிப்பு 70% என உயர்ந்துள்ளது.
இந்தியாவில் சிறந்த மேலாண்மை மற்றும் வளர்ச்சியே பாரதி ஏர்டெல் நிறுவனம் 100 மில்லியன் டாலர்கள் கிளப்பில் இணைவதற்கு முக்கிய காரணம் என CLSA என்ற தரகு நிறுவனமானது தெரிவித்துள்ளது. வளர்ச்சி ,திறமையான மேலாண்மை மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய திறன் ஆகிய மூன்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தை மேலும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் ரூ.1432.80க்கு வர்த்தகமாகி வரும் நிலையில் இதன் மதிப்பு 1540 வரை எட்டக்கூடும் என கணிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் என்பது 4% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் வருவாய் 36,009 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 37 , 599.1 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மொத்தமாக மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் இதன் ஒரு பயனாளருக்கான சராசரி வருவாய் என்பது 209 ரூபாய் என அதிகரிக்கிறது. முந்தைய காலாண்டில் இது 208 ரூபாயாக இருந்தது.
2022 -23ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1.30 லட்சம் கோடிகளாக இருந்து 2023-24ஆம் நிதியாண்டில் 1.49 லட்சம் கோடிகள் என 7.7% உயர்ந்துள்ளது. ஆனால் நிறுவனத்தின் லாபம் 8,346 கோடி ரூபாயிலிருந்து 7,467 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications