இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 புதிய இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு வருடத்திற்கு 3-5 வாகனங்களை அறிமுகம் செய்தாலே வாடிக்கையாளரின் டிமாண்ட்-க்கு ஏற்ப வாகனங்களை தயாரிக்க முடியாது என்ற நிலை இருக்கும் சூழ்நிலையில், ஓலா 2 வருடத்தில் 20 இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன மாடல்களை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது, அனைவருக்கும் தூக்கி வாரிப்போட்டு உள்ளது. உண்மையில் இது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓலா கடந்த சில மாதங்களாக அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது, குறிப்பாக ஓலா நிறுவனரான பாவிஷ் அகர்வால் சமூகவலைத்தளத்தில் பேசுவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது, குறிப்பாக ஸ்டான்டஅப் காமெடியன் உடனான சண்டை பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் இன்று காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஓலா செப்டம்பர் காலாண்டில் சுமார் ரூ.1,240 கோடி வருவாய் பெற்று வருடாந்திர அடிப்படையில் சுமார் 38.5% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. மேலும் ஓலா நிறுவனம் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு குறைந்த நஷ்டத்தை பதிவு செய்துள்ளது, நஷ்ட அளவீடு 524 கோடியில் இருந்து 495 கோடியாக குறைந்துள்ளது.
ஓலா நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க 2025 மார்ச் மாதத்திற்குள் தனது ரீடைல் விற்பனையக நெட்வொர்க்கை 2,000 கடைகளாக விரிவுபடுத்த டார்கெட் வைத்துள்ளது. ஒவ்வொரு கடையிலும் சராசரியாக 130 வாகனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் இந்த கடைகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது ஓலா.
ஓலா மலிவு விலை வாகனங்கள் தயாரித்து அதிகப்படியான வாகனங்களை குறைந்த காலக்கட்டத்தில் விற்பனை செய்தாலும், இந்த நிறுவனம் அதிகப்படியான நுகர்வோர் புகார்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் ஓலா நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் (CCPA) ஒழுங்குமுறை கண்காணிப்புக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த மோசமான நிலைக்கு ஸ்டான்ட்அப் கமெடியன் குணால் கமரா போன்றவர்களின் டிவிட்டர் விமர்சனங்கள் முக்கிய காரணமாக உள்ளது.
இந்த சவால்களுக்கிடையேயும், ஓலா தனது எதிர்கால திட்டத்தில் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் உள்ள ஓலாவின் கிகாஃபேக்டரி-யில் பேட்டரி செல் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்துள்ளது, செப்டம்பர் காலாண்டில் 20,000 க்கும் மேற்பட்ட செல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்துள்ளது.


Click it and Unblock the Notifications