பெங்களூரு : ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் கடந்த ஏழு வர்த்தக நாட்களில் அவருடைய சொத்து மதிப்பு 20,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அண்மையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து பங்குச்சந்தையில் கால் பதித்தது.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வார காலத்திலேயே பல மடங்கு அதிகரித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது முதலே இதன் பங்கு மதிப்பு கணிசமான அளவு வளர்ச்சியிலேயே இருக்கிறது. இதன் மூலம் பாவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பும் 20,000 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது. இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்தவர்களுக்கு 100% மேல் லாபம் கிடைத்துள்ளதாம்.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஐபிஓ வெளியீடு செய்தது. இதனை அடுத்து ஆகஸ்ட் 9ஆம் தேதி இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது முதல் ஏழு வர்த்தக நாட்களில் இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மதிப்பு 107 சதவிகிதம் என உயர்ந்தது. அதாவது 76 ரூபாய்க்கு முதலில் பட்டியலிடப்பட்டு அதன் மதிப்பு தற்போது 157 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி என்று பங்குச்சந்தையில் கூட இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 143 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது.
பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்வதன் மூலம் பாவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் பாவிஷ் அகர்வால் 30 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். அதாவது 132.39 கோடி பங்குகளை அவர் தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறார். எனவே பங்கு மதிப்பின்படி கணக்கீடு செய்யும் போது அவரிடம் இருக்கும் பங்கின் மதிப்பு மட்டுமே 20,856 கோடி ரூபாயாக இருக்கிறது.
இதன் மூலம் அவரது நிகர சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவன பங்குகளை பொருத்தவரை ஹெச்எஸ்பிசி நிறுவனம் இதனை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை பாவிஷ் அகர்வால் தொடங்கினார். இந்த நிறுவனம் மின்சார வாகனங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
பஞ்சாப் மாநில லூதியானாவை சேர்ந்த பாவிஷ் அகர்வால் இந்தியாவில் குறிப்பிடத்தக்க தொழில் முனைவோராக இருக்கிறார். ஓலா கேப்ஸ் மற்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனங்கள் மற்றும் குரிட்டிரம் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஆகிய மூன்றுக்கும் இவர் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications