ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 9.3 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 688 பில்லியன் டாலராக இருந்தது. இது 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை குறிப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன், கடந்த வாரத்தில் கையிருப்பு 2.703 பில்லியன் டாலர் உயர்ந்து 698.192 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால், இந்த வாரம் ஏற்பட்ட சரிவு, சமீப காலங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், வெளிநாட்டு நாணயச் சொத்துக்கள் 7.319 பில்லியன் அமெரிக்க டாலர் குறைந்து 581.607 பில்லியன் டாலராக சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. டாலர் மதிப்பில் கணக்கிடப்படும் இந்த சொத்துகளில், அமெரிக்கா அல்லாத நாணயங்களான யூரோ, பவுண்ட், யென் போன்றவை மதிப்பு உயர்வு அல்லது குறைவின் தாக்கமும் அடங்கும்.
அதே வாரத்தில் தங்கக் கையிருப்பு 1.706 பில்லியன் டாலர் குறைந்து 83.998 பில்லியன் டாலராகவும், சிறப்பு வரைவுத் தகுதி 237 மில்லியன் டாலர் குறைந்து 18.572 பில்லியன் டாலராகவும் சரிந்துள்ளது. மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் உள்ள இந்தியாவின் கையிருப்பு நிலையும் 59 மில்லியன் டாலர் குறைந்து 4.694 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள், தங்களின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை அதிக அளவில் சேமித்து வருகின்றன. இதில் இந்தியாவும் உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வைத்திருக்கும் தங்கத்தின் விகிதம், 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கம், இந்தியாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது.
2023ஆம் ஆண்டில், இந்தியா தனது வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் சுமார் 58 பில்லியன் அமெரிக்க டாலர் சேர்த்துள்ளது. இது, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட மொத்த 71 பில்லியன் டாலர் வீழ்ச்சிக்குப் பெரிய முரணாகும். 2024ஆம் ஆண்டில், கையிருப்பு மேலும் 20 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்து, 2024 செப்டம்பர் இறுதியில் 704.885 பில்லியன் டாலர் என்ற சாதனையை எட்டியது.
இந்தியாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு, நாட்டின் 11 மாத இறக்குமதி தேவையை பூர்த்தி செய்யவும், வெளிநாட்டு கடனின் சுமார் 96 சதவீதத்தைத் தீர்க்கவும் போதுமானதாக உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications