இந்தியாவில் பணிநீக்க அளவுகள் குறைவு என கூறப்படும் வேளையில் ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் சுமார் 71 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

இந்திய வர்த்தக சந்தையில் ஏற்கனவே மக்கள், செலவு செய்யும் அளவீட்டை அதிகளவில் குறைத்துள்ள காரணத்தால் பல முன்னணி நிறுவனங்கள் தினசரி வர்த்தக எண்ணிக்கையில் சரிவை கண்டு வருகிறது. இது மட்டும் அல்லாமல் சந்தையில் புதிய முதலீடுகளும் அதிகளவில் குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் ஆய்வறிக்கையில் 71 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பது மட்டும் அல்லாமல் பல முக்கியமான விஷயங்களையும் பட்டியலிட்டு உள்ளது. ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் ஆய்வில் பங்குப்பெற்ற இந்திய நிறுவனங்களில் 36 சதவீத நிறுவனங்கள் அதிகப்படியான ஊழியர்களை பணியமர்த்திய காரணத்தால் மட்டுமே பணிநீக்கம் செய்யும் நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் பங்குப்பெற்ற நிறுவனங்களில் எஞ்சியுள்ள நிறுவனங்களில் 30 சதவீத நிறுவனங்கள் செலவுக் குறைப்பு காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர். இதோடு 23 சதவீத நிறுவனங்கள் பொருளாதார சரிவே பணிநீக்கங்களுக்கு காரணம் என்று கூறுகின்றன.

மேலும் 11 சதவீத நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலம் ஊழியர்களின் தேவை குறைந்த காரணத்தால் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் மற்றொரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு என்னவென்றால், ஆய்வில் பங்குப்பெற்ற நிறுவனங்களில் சுமார் 57 சதவீத நிறுவன ஊழியர்கள் தங்களுடைய வேலை உத்தரவாதம் குறித்த அச்சத்தில் உள்ளனர்.
ஜீனியஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆர்.பி. யாதவ் கூறுகையில், இந்த ஆய்வின் மூலம் பணிநீக்கங்கள் ஊழியர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வின் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மேலும் நிறுவனங்கள் சிறந்த முறையில் எதிர்கால சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு பணியாளர்களை சேர்ப்பதை திட்டமிட வேண்டும், மேலும் நிர்வாகம் ஊழியர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications