மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பங்குச்சந்தை முதலீடுகள் மீது விதிக்கப்படும் LTCG வரி விதிப்பு குறித்து கருத்து கேட்க உள்ளதாகத் தெரிவித்த நாளில் இருந்து, முதலீட்டுச் சந்தையில் LTCG வரி நீக்கப்படும் அல்லது குறைக்கப்படும் என்ற கருத்து நிலவி வருகிறது.
உலகளாவிய முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் போர், சப்ளை செயின் பிரச்சனை காரணமாக இந்திய முதலீட்டுச் சந்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விருப்பம் இல்லாத அல்லது குறைவான லாபம் தரக்கூடிய சந்தையாக மாறியுள்ளது. இதற்கு மத்தியில் LTCG வரி வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது.

இதன் விளைவு அக்டோபர் மாதம் மட்டும் FPI என அழைக்கப்படும் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 34,843 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
மேலும் CDSL வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் 2026ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் வெளியேற்றிய தொகை 2.95 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி இன்று மத்திய அரசுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டின் மீது விதிக்கப்படும் LTCG வரி விதிப்பை ரத்து செய்யப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில், தற்போது செய்யப்பட்டுள்ள மியூச்சுவல் பண்டு முதலீட்டை விற்றுவிட்டு அப்பணத்தை மீண்டும் புதிய பண்டுகளில் முதலீடு செய்யும் பட்சத்தில் LTCG வரி விதிப்பில் விலக்கு அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.
இதன் மூலம் முதலீட்டுச் சந்தையில் இருக்கும் தொகை தொடர்ந்து சுழற்சி அடையும், முதலீடுகள் அதிகளவில் வெளியேற்றப்படாது எனச் செபி நம்புகிறது.
செபியின் பரிந்துரை ஒருபக்கம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைந்தாலும், இந்தியப் பங்குச்சந்தை பெரும் சரிவுக்குக் கொண்டு செல்லாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து வருகிறது.
சென்செக்ஸ் குறியீடு 86,159 புள்ளிகளில் இருந்து 10000 புள்ளிகளுக்கு அதிகமாகக் குறைந்து 75,692 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் நிஃப்டி 50 குறியீடு 26,373.20 புள்ளிகளில் இருந்து 23,440.80 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த நிலையைக் கூடுதலாக மோசமாக்கக் கூடாது என்பதற்காக LTCG வரி விதிப்பின் சுமையைக் குறைக்க முயற்சி செய்து வருகிறது செபி.
தற்போது ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொகை 12 மாதங்களுக்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டு இருந்தால் இருந்தால் அதை விற்கும் போது 12.5 சதவீதம் என்ற LTCG வரி விதிக்கப்படுகிறது. இதுவே 12 மாதங்களுக்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் STCG வரியாக 20 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதை தாண்டி STT வரியும் உள்ளது.


Click it and Unblock the Notifications

