பல ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் கோப்பையை இந்த ஆண்டு அணி வென்றது. இந்த வெற்றி பரவசம் அடங்குவதற்குள், அணியின் உரிமையாளரான டியாகோ இந்தியா நிறுவனம், RCB ஃபிரான்சைஸை விற்கப் போவதாக அறிவித்தது. இது இந்திய கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, ஐபிஎல்-இன் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றை யார் வாங்குவார்கள் என்ற யூகங்கள் தற்போது வலுத்து வருகின்றன.
ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் : இந்தச் சூழலில், 'காந்தாரா', 'KGF' போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ், RCB அணியை இணைந்து வாங்க ஆர்வம் காட்டுவதாகப் பல ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

RCB-யின் தற்போதைய உரிமையாளர்களுக்கும், ஹொம்பாலே பிலிம்ஸுக்கும் இடையே இதுகுறித்து ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தங்கள் மாநிலத்தின் மிகவும் விருப்பமான கிரிக்கெட் அணியுடன் இணைவது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஹொம்பாலே பிலிம்ஸ் ஏற்கனவே RCB அணியுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளது. 2023 ஏப்ரல் முதல், இந்த நிறுவனம் RCB-யின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் விளம்பரப் பங்காளராக (Digital Content Partner) செயல்பட்டு வருகிறது. சினிமா பாணியிலான விளம்பரங்களையும், ரசிகர்களை கவரும் வீடியோக்களையும் தயாரித்து, அணியின் இணையதள செல்வாக்கை உயர்த்தியது ஹொம்பாலேதான்.
ஏலத்தில் பெரிய நிறுவனங்கள் : ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, RCB அணியின் சந்தை மதிப்பு சுமார் ரூ.17,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், இது ஐபிஎல்-இல் அதிக மதிப்புள்ள அணிகளில் ஒன்றாக மாறியுள்ளது. ஹொம்பாலே நிறுவனத்துடன், பெங்களூருவை தளமாகக் கொண்ட கோடீஸ்வரர்களான நிகில் காமத் (ஜெரோதா), ரஞ்சன் பாய் (மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழு), மற்றும் அதர் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா) ஆகியோரின் கூட்டமைப்பும், அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ குழுமம் மற்றும் அமெரிக்காவை தளமாக கொண்ட தனியார் முதலீட்டு குழுவும் ஆர்சிபி அணியை ஏலத்தில் எடுக்க மும்முரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஹொம்பாலே மற்றும் RCB-யின் கூட்டு, வணிக ரீதியாக மட்டுமின்றி, உணர்ச்சிபூர்வமாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஹொம்பாலே சினிமா மூலமாகவும், RCB கிரிக்கெட் மூலமாகவும் கர்நாடகாவின் நவீன அடையாளத்தை பிரதிபலிக்கின்றன. இந்த இணைப்பு உண்மையானால், அது RCB அணியின் உள்ளூர் அடையாளத்தை வலுப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் நீடித்த விசுவாசத்தை உருவாக்கும் ஒரு கலாச்சார நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications