கோயம்புத்தூர் வெறும் டெக்ஸ்டைல், மோட்டார், உதிரிபாங்கள், MSME களஞ்சியமாக இருந்து இன்று இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் ஐடி ஹப் ஆக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஏற்ப கோயம்புத்தூரில் அடுத்தடுத்து ஐடி நிறுவனங்கள் தனது அலுவலகத்தை அமைத்து வருகிறது.
சமீபத்தில் கூட இன்போசிஸ் தற்போது செயல்பட்டு வரும் அதே டெக் பார்க்கில் 3 புதிய தளங்களை குத்தகைக்கு எடுத்து, கோயம்புத்தூரில் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் அடுத்த ஒரு முக்கியமான நிறுவனம் கோயம்புத்தூர்-க்கு வர உள்ளது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு கோயம்புத்தூரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஈல்காட் IT டவரில் பிரான்சின் முன்னணி IT நிறுவனமான கேப்ஜெமினி, சுமார் 1.4 லட்சம் சதுர அடி இடத்தை குத்தகைக்கு எடுத்து தனது மெகா கோயம்புத்தூர் அலுவலகத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
கேப்ஜெமினி தமிழ்நாட்டில் ஏற்கனவே 12,000 பேரை பணியில் அமர்த்தியுள்ள நிலையில், கோவை உடன் சேர்ந்து தற்போது சென்னையில் தனது வளாகத்தை விரிவுபடுத்தி 6,000 பேரை வேலைக்கு அமர்த்தவும் முடிவு செய்துள்ளது.
நவம்பர் 30 அன்று, தமிழ்நாடு ஐடி மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி. தியாகராஜன் தனது ட்விட்டரில், பிரான்ஸ்-இந்திய வணிக சபையின் MEDEF இன்டர்நேஷனல் தூதுக்குழுவில் கேப்ஜெமினி நிறுவனர் பால் ஹெர்மெலின் உட்பட பலர் அவரை சந்திக்க வந்ததாக தெரிவித்தார்.
பிடிஆர், கேப்ஜெமினி இந்தியாவில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு தனது செயல்பாடுகளை தொடங்கியது என்றும், தமிழ்நாட்டில் அவர்களது ஊழியர் எண்ணிக்கை 12,000 பேர் மட்டுமே (சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில்) இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் வலிமையை விளக்கிய தியாகராஜன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழ்நாட்டின் இளைஞர்களின் திறமையை மேம்படுத்தவும், உலகளாவிய பொருளாதாரத்தில் தமிழ்நாட்டின் நிலையை உயர்த்தவும் எடுத்துள்ள புதிய முயற்சிகளைப் பற்றியும் MEDEF இன்டர்நேஷனல் தூதுக்குழுவினருக்கு விளக்கினார்.
இதற்கு பதிலளித்த பால் ஹெர்மெலின், தமிழ்நாட்டில் தங்களது இந்திய ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க தனி கட்டிடம் அல்லது வளாகத்தை அமைக்கும் திட்டத்தை விரைவில் பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதனால் அடுத்த 2 வருடத்திற்குள் சென்னை அல்லது கோயம்புத்தூரில் கேப்ஜெமினி கேம்பஸ் வர உள்ளது.


Click it and Unblock the Notifications