ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2019-2024 ஆம் அதிக செல்வத்தை உருவாக்கும் பங்குகளின் பட்டியலில் மிகப்பெரும் செல்வத்தை உருவாக்கும் பங்குகளாக உருவெடுத்துள்ளது என மோதிலால் ஓஸ்வால் பைனான்சியல் சர்வீசஸ் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி, மோதிலால் ஓஸ்வால் வருடாந்திர வெல்த் கிரியேஷன் 29-வது ஆய்வின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இது தொடர்ந்து 6-வது முறையாகும்.
கடந்த 2019-24 வரையிலான மதிப்பீட்டு காலத்தில் அதிக செல்வத்தை உருவாக்கிய பங்குகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ரூ.11,17,800 கோடி செல்வத்தை உருவாக்கி முதலிடம் வகிக்கிறது. 17 ஆண்டுகளில் 5 ஆண்டு மதிப்பீட்டு காலகட்டங்களில் நிறுவனம் அதன் 11-வது சாதனையை படைத்துள்ளது.

இந்நிறுவனத்தை தொடர்ந்து மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான டிசிஎஸ் ரூ.8,31,200 கோடியுடன் இரண்டாவது இடத்திலும், ரூ.5,44,900 கோடியுடன் பார்தி ஏர்டெல் முன்றாவது இடத்திலும் உள்ளன.
தனியார் துறையைச் சேர்ந்த ஐசிசிஐ வங்கி ரூ.5,10,900 கோடியுடனும், பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ரூ.4,17,600 கோடியுடனும் இந்த பட்டியலில் 4 மற்றும் 5-வது இடங்களில் உள்ளன. இன்போசிஸ் ரூ.3,89,300 கோடியுடன் 6-வது இடத்திலும், எல் அண்ட் டி ரூ.3,53,000 கோடியுடன் 7-வது இடத்திலும் உள்ளன.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தில், 2019-24 காலட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக அதானி கிரீன் எனர்ஜி உள்ளது. இது வேகமாக செல்வத்தை உருவாக்கும் பங்கு ஆக உள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி பவர் அதிக சொத்துகளை உருவாக்குவதில் மிக முக்கிய நிறுவனங்களாக திகழ்கின்றன. அதன்படி, ரூ.3.40,800 கோடியுடன் அதானி எண்டர்பிரைசஸ் இந்த பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் சிறந்த ஆல் ரவுண்ட் வெல்த் கிரியேட்டர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. டாடா மோட்டார்ஸ் ரூ.3,15,400 கோடியுடன் 9-வது இடத்திலும், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் ரூ.3,15,000 கோடியுடன் 10-வது இடத்திலும் உள்ளன.
மோதிலால் ஓஸ்வாலின் தரவரிசை ஆனது, பங்குச் செயல்திறன் பெஞ்ச்மார்க் நிஃப்டி 50 மொத்த வருவாய் குறியீட்டை விஞ்சும் பட்சத்தில்,உருவாக்கப்பட்ட முழுமையான செல்வத்தின் அடிப்படையில் இறங்கு வரிசையில் முதல் 100 நிறுவனங்களை பட்டியலிடுகிறது. அந்த வகையில், 2019-24 காலகட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. கணக்கீட்டு காலகட்டத்தில் மொத்த சொத்து உருவாக்கத்தில் மேற்கண்ட 10 நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம் அளவுக்கு உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் நிஃப்டி மிட்கேப் 100 21% சிஏஜிஆரையும், நிஃப்டி ஸ்மால் கேப் 100 18% சிஏஜிஆரையும் பெற்றுள்ளதுடன், மிட் மற்றும் ஸ்மால் கேப் பிரிவுகளின் வலுவான செயல்திறன்களை வெளிப்படுத்தியுள்ளது என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications