வாழை நார்களை கொண்டு புதுமையாக சிந்தித்து பீகாரை சேர்ந்த நண்பர்கள் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். பீகார் மாநிலத்தின் ஹஜிப்பூர் பகுதியை சேர்ந்தவர் தான் ஜகத். இவர் பொறியியல் பட்டதாரி மற்றும் எம்பிஏ படிப்பை முடித்தவர். பெங்களூரில் உள்ள ஆச்சார்யா இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் பொறியியல் படித்த இவர் ஜெய்ப்பூர் டக்சீலா கல்லூரியில் மார்க்கெட்டிங் பிரிவில் எம்பிஏ முடித்தார். பின்னர் பெரிய நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் அவருக்கு வேலை கிடைத்தது.
ஆனால் அந்த வேலையை வேண்டாம் என துறந்த அவர் சொந்த ஊருக்கு திரும்பி நண்பர்கள் சத்யம் குமார் மற்றும் நித்திஷ் வர்மா ஆகியோருடன் இணைந்து சுயதொழில் செய்ய முடிவு செய்தார்.

இவர்கள் மூவரும் கல்லூரி காலம் முதலே நண்பர்கள். மூவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் நட்பு தொடர்ந்து நீடித்தது . கொரோனா காலகட்டத்தில் மூவரும் இணைந்து தங்கள் சொந்த மாநிலத்திலேயே சுயதொழில் ஒன்றை தொடங்கி தங்களால் இயன்றவரை வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
இதனை அடுத்து 6 முதல் 8 மாத காலங்களுக்கு இவர்கள் மூன்று பேரும் என்னென்ன தொழில்களை பிகாரில் இருந்து செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வு செய்தார்களாம். அப்போதுதான் இவர்களுக்கு வாழை நார்கள் குறித்து தெரிய வந்தது.
எனவே வாலைநார்கள் தொழிலில் ஈடுபடுவது என முடிவு செய்தனர். பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை அதிக அளவில் வாழை மரம் விவசாயம் செய்யும் ஒரு மாநிலம் ஆகும். இந்த வாழை நார் துணிமணி உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இதனை அடுத்து அறிவியல் விஞ்ஞானியான சுனிதா குஷ்வானாவிடம் பயிற்சிக்கு சென்ற இவர்கள் வாழையிலிருந்து எப்படி நாரினை பிரித்தெடுப்பது என்பது குறித்து பயிற்சி பெற்றுக்கொண்டனர்.
இதன் பிறகு 2021 ஆம் ஆண்டில் Taruwar Agro என்ற நிறுவனத்தை தொடங்கினர். இதற்காக மூவரும் இணைந்து 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஹஜிப்பூர் பகுதியில் பத்தாயிரம் சதுர அடி இடத்தை வாங்கி அங்கே தங்களுடைய ஆலையை நிறுவினர்.
முதலில் வாழைத்தண்டினை கொண்டு நார்களை எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டமுடியும் என்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே பெரிய சவாலாக இருந்தது என இந்த மூவரும் தெரிவிக்கின்றனர். பின்னர் அவர்களிடமிருந்து ஒரு வாழைத்தண்டு 25 ரூபாய் என்ற அளவில் கொள்முதல் செய்தனர் .பின்னர் இந்த வாழைத்தண்டுகளை ஆலைக்கு கொண்டு வந்ததும் இயந்திரங்களைக் கொண்டு நார்களை பிரிக்க தொடங்கினர்.
இரண்டு வகைகளில் இந்த நார்கள் பிரித்து எடுக்கப்படுகிறது, ஒன்று துணி நெய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது மற்றொன்று சானிடரி பேட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னர் பல்வேறு நிறுவனங்களுக்கும் சென்று தங்களுடைய வாழைநார்களை சந்தைப்படுத்தி படிப்படியாக தொழிலை இவர்கள் வளர்த்தனர்.
இந்த நிறுவனம் தற்போது 16 பேருக்கு வேலை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தற்போது இவர்களிடம் இருந்து 500 கிலோ கிராம் வாழை நார்கள் மாதந்தோறும் பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாழை தண்டுகளைக் கொண்டு உரங்களை தயாரித்தும் இவர்கள் விற்பனை செய்கின்றனர். 2024ஆம் நிதி ஆண்டில் இவர்களின் வாழை நார்கள் மற்றும் உரங்கள் ஐரோப்பா, ஜப்பான், துபாய் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications