பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், போட்டி கடுமையாகிக்கொண்டு இருக்கும் காரணத்தால் ஆளும் கட்சி மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
தேர்தல் ஆரவாரம் துவங்குவதற்கு முன்பாகவே பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் வருகிற ஆகஸ்ட் 1 முதல் மாநிலம் முழுவதும் தகுதியான வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நிதிஷ் குமார்-ன் இந்த முடிவு சுமார் 1.67 கோடி குடும்பங்களுக்கு பயன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ் குமார் இந்த அறிவிப்பை தனது X கணக்கின் வாயிலாக மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துகொண்டார். இவரின் பதிவில் "எங்களுடைய அரசு ஆரம்பத்தில் இருந்தே மாநில மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரத்தை வழங்கி வருகிறோம். இப்போது, ஆகஸ்ட் 1, 2025 முதல் அதாவது ஜூலை பில் முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து வீட்டு நுகர்வோரும் 125 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டிற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 1 கோடி 67 லட்சம் குடும்பங்கள் பயனடையும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் மக்களின் வாழ்க்கை செலவை குறைக்க ஒரு பெரிய படியாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்கள் மக்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்து வரும் வேளையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். உதாரணமாக கர்நாடகாவில் 200 யூனிட், பஞ்சாபில் 300 யூனிட், ராஜஸ்தான் 50 யூனிட், ஹிமாச்சல் பிரதேஷ் 125 யூனிட், தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதை தாண்டி டெல்லி, கோவா, கேரளா என பல மாநிலங்கள் மக்களுக்கு அளிக்கப்படும் மின்சாரத்திற்கு மானியம் அளித்து வருகிறது. ஆனால் இந்த இலவச மின்சாரம் வழங்கும் முறை, தகுதி ஆகியவை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுப்படுகிறது.
இதேபோல் நிதிஷ் குமார் மற்றொரு அறிவிப்பில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு மக்களின் ஒப்புதலுடன் வீட்டின் மேற்கூரைகள் அல்லது அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் சோலார் மின்சார நிலையங்களை (solar power plants) அமைக்க முடிவு செய்துள்ளதாக நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
மேலும் குடிர் ஜோதி திட்டத்தின் (Kutir Jyoti scheme) கீழ், மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பங்களுக்கு சோலார் அமைப்புகளை நிறுவுவதற்கான முழு செலவையும் அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டம் எதிர்காலத்தில் மின்சார செலவை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இலவச மின்சார திட்டம் மற்றும் சோலார் ஆற்றல் திட்டங்கள் பீகார் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.67 கோடி குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய நிதி நிவாரணமாக அமையும். இந்த அறிவிப்பு மூலம் மாதாமாதம் மின்சார செலவை மிச்சப்படுத்த முடியும். ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த திட்டம் தேர்தல் முன் மக்களுக்கு ஒரு பெரிய பரிசாக அமையும். நிதிஷ் குமாரின் இந்த முடிவு மக்களின் நம்பிக்கையை பெற உதவும்.


Click it and Unblock the Notifications