அமெரிக்கா: உலக கோடீஸ்வரகளில் முக்கிய நபரான பில்கேட்ஸ் புதுமையான கண்டுபிடிப்புகளிலும் புதுமையான ஆய்வுகளிலும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுபவர். மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின்னர், உலக அளவில் மருத்துவத் துறை மற்றும் பூமியின் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கான ஆய்வுகள் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் பில்கேட்ஸின் ஆதரவு பெற்ற ஸ்டீல் தயாரிக்கும் முறையில் புதுமையான தொழில்நுட்பம் கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் அமெரிக்காவில் தனது முதல் உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது.

புவி வெப்பமயமாதல் தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு காரணமாக நாம் அதிகளவில் வெளியிடும் கரியமில வாயு. இவை ஓசோன் படலத்தை பலவீனப்படுத்தி அதிகப்படியான வெப்பம் பூமியை வந்தடைய காரணமாக அமைந்துவிட்டன. எனவே புவி வெப்பமயமாதலை தடுக்க கரியமில வாயு வெளியேற்றம், காற்று மாசு ஆகியவற்றை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே மாசு ஏற்படுத்தும் பாரம்பரிய ஸ்டீல் தயாரிப்பு முறைகளுக்கு மாற்றாக பசுமையான வழிமுறைகளை கொண்ட எலக்ட்ரா (electra) நிறுவனம் அமெரிக்காவில் தனது ஆலையில் முதன்முறையாக ஸ்டீல் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு எலக்ட்ரா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் மூலம் ஸ்டீல் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் ஆளாக சென்று இதில் முதலீடு செய்தார்.
இன்ட்ரஸ்டிங் இன்ஜினியரிங் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள எலக்ட்ராவின் புதிய ஆலை, நிலையான ஸ்டீல் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
நிலக்கரி எரியும் உலைகளை பெரிதும் நம்பி இருக்கக்கூடிய பாரம்பரிய ஸ்டீல் தயாரிப்பு முறைகளைப் போல இல்லாமல் எலக்ட்ராவின் புதுமையான தொழில்நுட்பம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி குறைந்த தரம் கொண்ட தாதுக்களில் இருந்து சுத்தமான இரும்பை உற்பத்தி செய்கிறது.
இந்த புதிய அணுகுமுறை பாரம்பரிய ஸ்டீல் உற்பத்தி முறைகளால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்கிறது என எலக்ட்ரா நிறுவனம் கூறுகிறது. நிலக்கரி எரிவதால் ஏற்படும் 90% மாசுபாட்டை தங்களின் புதிய அணுகுமுறை குறைப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.
எந்த ஒரு மாசையும் உருவாக்காமல் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி இரும்பை உருவாக்க வேண்டும் என்பதே தங்களின் குறிக்கோள் என்கிறது எலக்ட்ரா நிறுவனம்.
எலக்ட்ரா நிறுவனம், தங்களின் தொழில்நுட்பம் மூலம் ஸ்டீல் உற்பத்தி செலவு குறைவதோடு, மாசினை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தியை வழங்குகிறது என குறிப்பிட்டுள்ளது.
உலகில் பெரிதும் தேவைப்படும் பொருட்களில் ஸ்டீல் முக்கிய இடத்தில் இருக்கிறது. இதனை உற்பத்தி செய்வதால் பூமிக்கு ஏற்படும் தீங்குகளை குறைத்தால் அது புவி வெப்பமயமாதலை தடுப்பதில் பெரிய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications