உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கி இளம் வயதிலேயே பில்லியனர் ஆனார். இதன் மூலம் இவருடைய செல்வம், வருமானம், முதலீடுகள், எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் டெக் துறையைச் சார்ந்து தான் இருக்கும், இதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
ஆனால் பில் கேட்ஸ் தனது முன்னாள் மனைவி மெலிண்டா உடன் இணைந்து உருவாக்கிய பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன், மற்றும் பில் கேட்ஸ்-ன் சொந்த மற்றும் தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான Cascade Investment உருவாக்கிய பின்பு இவரின் முதலீட்டும் கண்ணோட்டமும் பெரிய அளவில் மாறியது.
எந்தளவுக்கு மாறியுள்ளது என்றால் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.42 லட்சம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். ஒரு டெக் பில்லியனர் எதற்காக லட்சம் கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்கிறார்..? இந்த முக்கியமான கேள்விக்குப் பல வருடங்களாகப் பதில் தெரியாமல் இருந்த பலருக்குத் தற்போது பில் கேட்ஸ் நேரடியாகப் பதில் அளித்துள்ளார்.
பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் அந்நிறுவனத்தின் நேரடி நிர்வாகப் பொறுப்பில் இருந்து வெளியேறிய நாளில் இருந்து தனது முதலீட்டு திட்டத்தையும் பிற துறை சார்ந்த வர்த்தகம் மீது அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினார். அதிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட் நிர்வாகக் குழுவில் இருந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் வெளியேறிய பின்பு பில் கேட்ஸ் முதலீட்டு அளவு தாறுமாறாக அதிகரிக்கத் துவங்கியது.
ரெட்டிட் தளம்
பில் கேட்ஸ்-க்கு ரெட்டிட் தளத்தில் Ask Me Anything என்ற பிரபலமான தொகுப்பில் கலந்துக்கொண்டு பதில் அளிப்பது வழக்கம். இந்த நிவையில் 11வது முறையாக இந்த நிகழ்ச்சி தொகுப்பில் கலந்துக்கொண்ட பில் கேட்ஸ் பல முக்கியமான கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
80 சதவீத விவசாய நிலம்
பில் கேட்ஸ் முதலீடுகள் குறித்து ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் வேளையில் இவர் அமெரிக்காவில் சுமார் 80 சதவீத விவசாய நிலத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்ற கருத்து நீண்ட காலமாக உள்ளது.
கேள்வி
இந்த நிலையில் ரெட்டிட் தளத்தில் Ask Me Anything தொகுப்பில் நீங்கள் ஏன் இவ்வளவு விளைநிலங்களை வாங்குகிறீர்கள், இது கோடீஸ்வரர்களிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான செல்வத்தின் பிரச்சினையா..? நீங்கள் எவ்வளவு விவசாய நிலத்தை வாங்கலாம் என்றும் நினைக்கிறீர்களா? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
பில் கேட்ஸ் விளக்கம்
இதற்குப் பதில் அளித்த பில் கேட்ஸ் அமெரிக்காவில் 1/4000 க்கும் குறைவான விவசாய நிலம் மட்டுமே என்னிடம் உள்ளது. இந்தப் விவசாய நிலத்தின் மூலம் அதிக விவசாய உற்பத்தியை ஈட்டவும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தான், நான் முதலீடு செய்துள்ளேன். இதில் பெரிய திட்டம் எதுவும் இல்லை - உண்மையில், இந்த முடிவுகள் அனைத்தும் ஒரு தொழில்முறை முதலீட்டுக் குழுவால் எடுக்கப்படுகின்றன என விளக்கம் கொடுத்துள்ளார்.
அமெரிக்க அரசு தகவல்
அமெரிக்க வேளாண்மைத் துறை மற்றும் தேசிய வேளாண் புள்ளியியல் அமைப்பு வெளியிட்டுள்ள 2022 அறிக்கையின்படி, அமெரிக்காவில் 895,300,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் பில் கேட்ஸ் மட்டும் சுமார் 242,000 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளார். மொத்த விவசாய நிலத்தில் வெறும் 0.03 சதவீதம் மட்டுமே.
பில்லியனர்கள்
பில்லியனர்கள் பலர் ரியல் எஸ்டேட் முதலீட்டை முக்கிய முதலீடாக வைத்திருந்தாலும், வீடு, வில்லா, ஆடம்பர அப்பார்ட்மென்ட், பெரிய வீடு, மேன்ஷன், குட்டி தீவு போன்றவற்றைத் தான் வாங்குகிறார்கள். ஆனால் பில் கேட்ஸ் மட்டும் தான் அதிகளவிலான பணத்தை விவசாய நிலத்தை வாங்குவதில் முதலீடு செய்கிறார்.


Click it and Unblock the Notifications