மைக்ரோசாப்ட் நிறுவனர் மற்றும் உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் பிப்ரவரி 28 அன்று மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆர்பிஐ கவர்னரை சந்தித்துள்ளார்.
பில் கேட்ஸ் தங்கள் அலுவலகத்திற்குச் சென்று கவர்னர் சக்திகாந்த தாஸ் உடன் விரிவாகப் பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தியதாக ஆர்பிஐ தனது டிவிட்டர் கணக்கில் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
பில் கேட்ஸ்
உலகின் மிகவும் பிரபலமான டெக் கோடீஸ்வர தொழிலதிபர் மற்றும் நன்கொடையாளராக இருக்கும் பில் கேட்ஸ் இந்தியாவில் உடல்நலம், கல்வி மற்றும் பிற துறைகளில் வணிக வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய இந்தியவிற்கு வந்துள்ளார். 2023 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் பில் கேட்ஸ் செயல்பாடுகள் மிகவும் புதிதாகவும், வேகமாகவும் உள்ளது.
இந்தியா
சமீபத்தில் கூட, பில் கேட்ஸ் இந்தியாவில் வணிகம் மற்றும் பிற செயல்பாடுகளை நடத்த விரும்புவதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் இருக்கும் வர்த்தக வாய்ப்புகளை ஆய்வு செய்ய நேரடியாக வந்துள்ளார்.
பில் கேட்ஸ் டிவீட்
பூமியில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவிலும் குறைந்த வளங்கள் உள்ளன. ஆனால், அந்தக் கட்டுப்பாடு இருந்தபோதிலும் உலகம் எப்படி முன்னேற முடியும் என்பதை இந்தியா நமக்குக் காட்டியது என்று பிப்ரவரி 27 ஆம் தேதி பில் கேட்ஸ் ட்வீட் செய்தார்.
முக்கிய விஷயம்
பில் கேட்ஸ் மற்றும் சக்திகாந்த தாஸ் மத்தியிலான சந்திப்பில் யூபிஐ, ஈ-ரூபாய், டிஜிட்டல் பேமெண்ட், வங்கி துறையில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் பயன் குறித்து பேசப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி20 கூட்டம்
இந்தியாவின் ஜி20 தலைமை பொறுப்பு கீழ், 'டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் வாக்குறுதி' - மீள்திறன் மற்றும் உள்ளடக்கிய பொருளாதாரங்களை உருவாக்குவதற்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அஸ்வினி வைஷ்ணவ், பில் கேட்ஸ்
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை விருந்தினராகவும், சிறப்புப் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார். இவருடன் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவரும் டிரஸ்டி-யுமான பில் கேட்ஸ் கெளரவ விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
முக்கிய தலைவர்கள்
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகத் தான் பில் கேட்ஸ் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பில் கேட்ஸ் மட்டும் அல்லாமல் MOBIKWIK உபாசனா டக்கு, ZestMoney இன் இணை நிறுவனர் மற்றும் CEO லிஸி சாப்மேன், ஓபன் ஃபைனான்சியல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிறுவனர் மற்றும் COO மேபெல் சாக்கோ ஆகியோரும் கலந்துக்கொள்ள உள்ளனர்.


Click it and Unblock the Notifications