இந்தியாவின் மருந்துத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் துணிச்சலான முதலீட்டை, அகமதாபாத்தைச் சேர்ந்த டொரண்ட் குழுமத்தின் உரிமையாளர்களான சுதீர் மற்றும் சமீர் மேத்தா சகோதரர்கள் எடுத்துள்ளனர். World's Pharmacy ஆக வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இவர்கள் இருவரும் தங்களது சாம்ராஜ்யத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.
ஃபோர்ப்ஸ் இந்தியா 2025 பணக்காரர்கள் பட்டியலில் 14.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 15-வது இடத்தில் இருக்கும் மேத்தா சகோதரர்கள் தான், இந்த பிரம்மாண்டமான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

மருந்துத் துறையில் மெகா ஒப்பந்தம் : டொரண்ட் குழுமத்தின் முதன்மை நிறுவனமான டொரண்ட் ஃபார்மா, அதன் போட்டியாளரான ஜேபி கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் 46% பங்குகளை, கே.கே.ஆர். நிறுவனத்திடம் இருந்து ரூ.11,900 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஆண்டின் இந்திய மருந்துத் துறையில் நடந்த மிகப்பெரிய கையகப்படுத்துதல்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஜேபி ஃபார்மாவின் மேலும் 26% பங்குகளை சுமார் ரூ.6,800 கோடிக்கு வாங்குவதற்காக டொரண்ட் அறிவித்துள்ளது. இதன் மூலம், ஜேபி ஃபார்மாவை முழுமையாகத் தன்வசப்படுத்தி, எதிர்காலத்தில் டொரண்ட் நிறுவனத்துடன் அதை இணைக்கும் தெளிவான நோக்கத்துடன் மேத்தா சகோதரர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
டொரண்ட் குழுமம் மற்றும் டொரண்ட் ஃபார்மா ஆகிய இரண்டின் தலைவரான சமீர் மேத்தா கூறுகையில், "இந்தக் கையகப்படுத்தல் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு வலுவான ஊக்கத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம். ஜேபி ஃபார்மாவின் இந்தியச் சந்தை இருப்பும், சர்வதேச வர்த்தகமும் டொரண்ட் நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவுக்கு குறிப்பிடத்தக்க மதிப்பைச் சேர்க்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் டொரண்ட் ஃபார்மாவின் வருவாய் 7% அதிகரித்து ரூ.11,520 கோடியைத் தொட்டது. அதே காலகட்டத்தில், ஜேபி ஃபார்மாவின் விற்பனை 12% உயர்ந்து ரூ.3,920 கோடியாக இருந்தது. இந்த வளர்ச்சியின் பலனைப் பெறுவதே டொரண்டின் முக்கிய இலக்காகும்.
டொரண்ட் சாம்ராஜ்யம் :
டொரண்ட் குழுமம் 1959-ஆம் ஆண்டில், மேத்தா சகோதரர்களின் தந்தையான உத்தம்பாய் நத்தாலால் மேத்தாவால் தொடங்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டில் அரசு ஊழியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் ஸ்விஸ் மருந்து நிறுவனமான சான்டோஸில் விற்பனையாளராகப் பணிபுரிந்தார்.
உலகத் தரத்திலான மருந்துகளை இந்திய மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அவர் டொரண்டை கட்டமைத்தார். இன்று அதே தொலைநோக்குடன் சுதீர் மற்றும் சமீர் சகோதரர்கள் குழுமத்தை உலக அளவில் எடுத்துச் செல்கின்றனர்.
தற்போது மருந்து, மின்சாரம் மற்றும் எரிவாயு துறைகளில் இயங்கும் டொரண்ட் குழுமம் சுமார் 4.9 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. டொரண்ட் பவர் நிறுவனம் குஜராத் உட்பட 3 மாநிலங்களில் 3.8 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது.
சுதீரின் மூத்த மகன் ஜினல் மேத்தா இந்தக் குழுமத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில், டொரண்ட் குழுமம் டொரண்ட் டயக்னாஸ்டிக்ஸ் என்ற புதிய வர்த்தகத் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications