நம் நாட்டில் பணம், புகழ் போன்றவை தான் வெற்றியின் அளவுகோலாகப் பார்க்கப்படுகின்றன. இதை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இதுபோன்ற பொதுவான கருத்துக்களையும் மீறி ஒரு பில்லியனர் தனது வாழ்க்கையை மாற்றி துறவறத்தை தேர்ந்தெடுத்துள்ளார். மலேசியாவின் புகழ்பெற்ற பில்லியனரான ஆனந்த் கிருஷ்ணனின் ஒரே மகன் தனது தந்தையின் சாம்ராஜ்யத்தை விட்டுவிட்டு ஆன்மீகப் பாதையில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.
மலேசியாவைச் சேர்ந்த கோடீஸ்வரனான ஆனந்த் கிருஷ்ணனின் ஒரே மகனான "வென் அஜான் சிரிபான்யோ" தன் தந்தையின் வணிகத்தில் ஈடுபட விருப்பமின்றி துறவறம் பூண்டுள்ளார். நாட்டில் பலரும் தந்தையின் சொத்தை பயன்படுத்தி ஆடம்பரமாக வாழ நினைக்கையில், தனது வாழ்க்கையை ஆன்மீகத்திற்காக அர்ப்பணித்துள்ளார். அஜான் சிரிபான்யோ ஒரு எளிமையான புத்தத் துறவியாக மாறியுள்ளார்.

ஆனந்த் கிருஷ்ணா தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், செயற்கைக்கோள் என பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்துள்ளார். இவருடைய நிகர மதிப்பு தோராயமாக ரூ.45,339 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மலேசியாவின் பிரபல பணக்காரர்களில் இவரும் ஒருவர். இப்படி பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தை கொண்ட தனது தந்தையின் சொத்தில் துளியும் நாட்டமின்றி ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ளார் அஜான் சிரிபான்யோ.
ஹார்வேர்ட் பிசினஸ் ஸ்கூல் பட்டதாரியான ஆனந்த் கிருஷ்ணனிடம் மொத்தமாக 3 தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் உள்ளன. தற்போது இந்த 3 செயற்கைக்கோள்களும் பூமியைச் சுற்றி வருகின்றன. ஆனந்த் கிருஷ்ணன் ஒரு திறமையான தொழிலதிபர் என்றே சொல்லலாம். மலேசிய வணிக வட்டாரங்களில் AK என்று செல்லமாக அறியப்படும் டான்ஸ்ரீ ஆனந்த் கிருஷ்ணன் மதம் மற்றும் தொண்டு பணிகளுக்காக பெரிதும் அறியப்பட்டவர். நவம்பர் 26, 2024 நிலவரப்படி ஆனந்த் கிருஷ்ணனின் நிகர மதிப்பு 5.1 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனந்த் கிருஷ்ணனிடம் அபரிமிதமான செல்வம் இருந்த போதிலும் புத்த மதத்தின் போதனைகளில் ஆழமாக வேரூன்றியவர் இவர். இவருடைய மகன் சிரிபான்யோ தனது தந்தையின் செல்வத்தை துறந்து, தன்னுடைய ஆன்மீக பயணத்தை இன்னும் ஆழமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். தற்போது மலேசியாவின் 50 பணக்காரர்களின் பட்டியலில் ஆனந்த் கிருஷ்ணன் 6-வது இடத்தில் உள்ளார்.
ஆனந்த் கிருஷ்ணன் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவருடைய தலைமையின் கீழ் ஏர்செல் ஒரு முன்னணி நிறுவனமாக இருந்தது. மகத்தான செல்வத்தில் பிறந்த சிரிபான்யோ அவரது தந்தை ஆனந்த் கிருஷ்ணனின் பல பில்லியன் டாலர் பேரரசின் வாரிசாக கருதப்பட்டார். ஆனால் தன்னுடைய 18-ஆவது வயதில், வாழ்க்கையை மாற்ற முடிவெடுத்த சிரிபான்யோ துறவற வாழ்க்கையை நாடினார். படிப்படியாக ஆன்மீகத்தில் அவருடைய நாட்டம் திரும்பியது.
தற்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக துறவறப்பாதையை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதில் ஈடுபட்டு வருகிறார். சிரிபான்யோ தற்போது தாய்லாந்தில் உள்ள "Dtao Dum" என்ற மடாலயத்தில் மடாதிபதியாக பணியாற்றுகிறார். தியானம் கற்பித்தல் போன்ற விஷயங்கள் குறித்து பிறருக்கு பயிற்றுவிக்கிறார். சுமார் 8 மொழிகள் வரை சரளமாக பேசக்கூடியவர் சிரிபான்யோ. ஆக வாழ்க்கையின் உண்மையான வெற்றி பொருள் சார்ந்ததா? அல்லது ஆன்மீகம் சார்ந்ததா? என்ற கேள்வியை இவருடைய முடிவு நமக்குத் தூண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications