பயோகேஸ்-வின் முன்னோடியாக இந்தியா நீண்ட காலத்திற்கு முன்பே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. 1897 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் சிவில் இன்ஜினியர் சார்லஸ் ஜேம்ஸ், மும்பையில் உள்ள மாட்டுங்காவில் வீடற்ற தொழுநோயாளிகள் தங்கும் இடத்தில் சாக்கடை அமைக்கும் பணியை மேற்கொண்டபோது, முதல் பயோகேஸ்- ஆலை அமைக்கப்பட்டது.
அன்று முதல் இன்று வரையில் இந்தியாவில் பல மாட்டு பண்ணைகளில் பயோகேஸ் தயாரிக்கும் தளம் உருவாக்கப்பட்டது. இது பெரிய அளவில் வர்த்தகமயமாக்கப்படாத காரணத்தால் புகழ்பெறாமல் இருந்து வருகிறது. இன்றளவும் பயோகேஸ் உற்பத்தி செய்யப்பட்டு சமையலறைகள், சமூக கட்டமைப்புகள் மற்றும் பால் பண்ணைகள் ஆகியவை இயங்கி வருகிறது.

இப்போது இந்த பயோகேஸ் இந்தியாவின் முக்கிய எரிபொருளாக மாறும் திறன் பெற்றுள்ளது மட்டும் அல்லாமல் இதை வைத்து பெரும் எதிர்காலம் உருவாகும் நிலை இருக்கும் காரணத்தால் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களும், எரிசக்தி நிறுவனங்களின் பயோகேஸ் உற்பத்தி தளத்தை அமைக்கும் பணியை துவங்கியுள்ளது.
கடந்த வாரம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 100 கம்பிரஸ்டு பயோகேஸ் (CBG) ஆலைகளை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது. அதானி குழுமத்தின் அதானி டோட்டல் கேஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து சிபிஜி ஆலைகளை அமைக்கவும், எதிர்காலத்தில் அதிகளவில் CBG உற்பத்தி தளத்தை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
அம்பானி, அதானிகளோடு புனேவை தளமாகக் கொண்ட தெர்மாக்ஸ் மற்றும் எவர்என்விரோ ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் (EverEnviro) உடன் கைகோர்த்து, பயோ - சிஎன்ஜி திட்டங்களை அமைப்பதற்காக தெர்மாக்ஸ் பயோ எனர்ஜி சொல்யூஷன்ஸ் என்னும் நிறுவனத்தை நிறுவுகிறது.
மேலும் EverEnviro மட்டும் அடுத்த சில ஆண்டுகளில் இந்த பிரிவில் கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. EverEnviro இன் சொந்த துணை நிறுவனமான Green Growth Equity Fund (GGEF), இந்தியாவில் தற்போது 14 CBG ஆலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதோடு மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்பிசிஎல்) மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) ஆகியவை கம்பிரஸ்டு பயோகேஸ் (சிபிஜி) ஆலைகளை அமைப்பதற்கான நூற்றுக்கணக்கான கடிதங்களை (letters of intents) வழங்கியுள்ளன.
கம்பிரஸ்டு பயோகேஸ் என்பதை தான் CBG என அழைக்கப்படுகிறது. கழிவுகள் / உயிர் திரவ மூலங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு பசுமை எரிபொருள் ஆகும். இது கம்பிரஸ்டு இயற்கை எரிவாயு (CNG) போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது என்பதால் இதை வாகன, தொழில்துறை மற்றும் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படலாம்.

இந்திய பயோகாஸ் சங்கத்தின் கணிப்பின் படி இந்தத் துறையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 ஆலைகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்தியா எரிப்பொருள் மற்றும் எரிவாயு இறக்குமதியை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பயோகேஸ் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் ரீடைல் அடிப்படையில் சிறிய அளவிலும், சிறிய முதலீட்டாளர்கள் மட்டுமே பயோ கேஸ் தயாரித்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி டோட்டல் கேஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இத்துறைக்குள் வரும் வேளையில் பெரிய அளவில் முக்கியத்துவம் பெறும்.


Click it and Unblock the Notifications