இந்திய சந்தையில் தரமற்ற பொருட்களின் விற்பனை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், இந்திய தர நிர்ணய பணியகம் (Bureau of Indian Standards - BIS) முறைகேடுகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தரச் சான்றிதழ் இல்லாத பொருட்கள் நுகர்வோர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த பல்வேறு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த சூழலில், சென்னையில் உள்ள அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களின் கிடங்குகளில்(Warehouse) பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, ரூ.36 லட்சம் மதிப்புள்ள தரமற்ற பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் அமைந்துள்ள அமேசான் கிடங்கில், பிஐஎஸ் அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, பல்வேறு விதமான பொருட்கள் பிஐஎஸ் தரச் சான்றிதழ் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அங்குத் தரச்சான்று இல்லாத பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகள் பறிமுதல் செய்த பொருட்களில் முக்கியமாக,இன்சுலேட்டட் பிளாஸ்க்குகள், உணவு கொள்கலன்கள்,உலோக குடிநீர் பாட்டில்கள்,சீலிங் ஃபேன்கள்,பொம்மைகள், ஆகிய மொத்தம் 3,376 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.36 லட்சம் ஆகும். சோதனையை பிஐஎஸ் இணை இயக்குநர்கள் கௌதம் பி.ஜே மற்றும் தினேஷ் ராஜகோபாலன் தலைமையில் அதிகாரிகள் குழு மேற்கொண்டது.
இந்திய தர நிர்ணய சட்டம், 2016 இன் பிரிவு 17-ன் படி, பிஐஎஸ் சான்றிதழ் இல்லாமல் எந்த ஒரு பொருளையும் விற்பனை செய்ய முடியாது. ஆனால், இந்த அமேசான் கிடங்கில் தரச் சான்றிதழ் இல்லாத பொருட்கள் சேமிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டிருந்ததை பிஐஎஸ் கண்டறிந்தது.
அதே நாளில், பிஐஎஸ் அதிகாரிகள் கொடுவள்ளியில் உள்ள பிளிப்கார்ட் கிடங்கிலும் சோதனை நடத்தினர். அங்குத் தரச்சான்று இல்லாத பல பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் 286 பேக்குகள், குழந்தைகளுக்கான டயப்பர்கள், 36 பெட்டிகள் கேசரோல்கள், 26 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குடிநீர் பாட்டில்கள், மற்றும் 10 இன்சுலேட்டட் ஸ்டீல் பாட்டில்கள் அடங்கும். இந்த சோதனையை பிஐஎஸ் இயக்குநர் ஜீவானந்தம் டி மற்றும் இணை இயக்குநர் ஸ்ரீஜித் மோகன் தலைமையிலான அதிகாரிகள் குழு மேற்கொண்டது.
பிஐஎஸ் தரச் சான்றிதழ் பெறாத பொருட்களை பயன்படுத்துவது பல்வேறு அபாயங்களை ஏற்படுத்தலாம். பாதுகாப்பு முக்கியமான விஷயமாகும், ஏனெனில் தரமற்ற பொருட்கள் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். நம்பிக்கைத்தன்மை உள்ளிட்ட காரணங்களால், பிஐஎஸ் சான்றிதழ் பெற்ற பொருட்கள் மட்டுமே தரம் மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவையாக இருக்கும்.
மேலும், சட்டத்தை பின்தொடர்ந்து அதை கடைபிடிக்கப்பட வேண்டும், ஏனெனில் பிஐஎஸ் அங்கீகாரம் இல்லாத பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது. அதே நேரத்தில், நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், தரமற்ற பொருட்கள் வாங்குபவர்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, நுகர்வோர்கள், விற்பனையாளர்கள், மற்றும் நிறுவனங்கள் இணைந்து தரச் சான்றிதழ் உள்ள பொருட்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த வழக்கில், பிஐஎஸ் அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி, சட்டத்தின் முழுமையான மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications