அமெரிக்காவின் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC பிட்காயின் வாயிலான ETF திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களுக்கான முதல் ETF திட்டத்தை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் கிரிப்டோகரன்சியின் அரசன் எனச் செல்லமாக அழைக்கப்படும் பிட்காயின் விலை 66,974.77 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
சீனா - அமெரிக்கா
கிரிப்டோகரன்சி மீது சீனா விதித்த அடுத்தடுத்த தடை உத்தரவு மூலம் பிட்காயின் உட்பட அனைத்து நாணயங்களும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்ட நிலையில் அமெரிக்க அரசின் ஆதரவும், ETF-க்கான ஒப்புதலும் பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
வரலாற்று உச்சம்
இதன் எதிரொலியாகவே இன்று பிட்காயின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 66,974.77 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. சொல்லப்போனால் ETF முதலீடுகள் துவங்கிய சில நிமிடத்தில் பிட்காயின் விலை 63,808 டாலரில் இருந்து 66,909 டாலர் வரையில் உயர்ந்தது.
SEC அமைப்பு
இந்த அளவீடு அடுத்த சில மணிநேரத்தில் குறைந்தாலும், பெரிய அளவில் குறையாமல் 61,989.36 டாலரில் தற்போது வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. கிட்டதட்ட அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC-ஏ பிட்காயின் மீதான முதலீட்டுக்கு ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில் அனைத்து கிரிப்டோகரன்சியும் இன்று உயர்ந்துள்ளது.
மொத்த சந்தை மதிப்பு
இன்றைய உயர்வின் மூலம் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 1.3 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது கிரிப்டோ சந்தையில் 18.85 மில்லியன் டாலர் மதிப்பிலான பிட்காயின் புழக்கத்தில் உள்ளது.
24 மணிநேர சரிவு
2021ஆம் ஆண்டில் மட்டும் பிட்காயின் மீதான முதலீட்டில் இதன் மொத்த மதிப்பு 123.41 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் பிட்காயின் கடந்த 24 மணிநேரத்தில் உச்ச விலையான 66,974.77 டாலரை அடைந்த பின்பு 1,240.19 டாலர் வரையில் சரிந்துள்ளது.
கிரிப்டோகரன்சி விலை
தற்போதைய நிலவரத்தின் பிட்காயின் - 64,920.40 டாலர் (1.91 சதவீத உயர்வு), எதிரியம் - 4,177.78 டாலர் (8.75 சதவீத உயர்வு), ரிப்பிள் - 1.14 டாலர் (4.01 சதவீத உயர்வு), கார்டானோ - 2.26 டாலர் (7.67 சதவீத உயர்வு), போல்காடாட் - 43.87 டாலர் (6.07 சதவீத உயர்வு), டோஜ்காயின் - 0.253 டாலர் (6.07 சதவீத உயர்வு).
அடுத்தது என்ன..?
அமெரிக்கா உட்படப் பல தென் ஆசிய நாடுகளும் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் பிட்காயின் அடுத்தது தனது இமாலய இலக்கான 1,00,000 டாலர் அளவீட்டை அடைவதைத் தான் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதன் வாயிலாகவே ETF முதலீட்டுக்குத் திறக்கப்பட்ட உடனேயே பல பெரும் முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ததால் இதன் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications