அமெரிக்காவில் அடுத்த சில நாட்களில் பொது தேர்தல் நடக்கும் காரணத்தால் அந்நாட்டு அரசியல் களம் அனல் பறக்கிறது, இதிலும் குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பு ஜோ பைடன் மற்றும் டொனால்டு டிரம்ப் ஆகியோரின் நேருக்கு நேர் விவாதத்திற்குப் பின்பு யாருக்கு வெற்றி என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மூலம் கொலை முயற்சி அரங்கேறியுள்ளது.
பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரச்சாரம் செய்யும் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு அவரின் வலது காதில் ரத்த காயம் ஏற்பட்டு உள்ளது. டிரம்ப்பை சுட்டதாக நம்பப்படும் 2 நபர்கள் சீக்ரெட் சர்வீஸ் வீரர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளனர். 30 நொடியில் மொத்த சம்பவமும் நடந்து முடிந்தது.

இந்த பரபரப்பான சம்பவத்திற்குப் பின்பு துப்பாக்கி சூட்டின் மூலம் முகம் முழுக்க ரத்தத்துடன் டிரம்ப் மக்களிடம் கைகளை உயர்த்தி காட்டிய புகைப்படம் இணையத்தில் வரலாகியுள்ளது மட்டும் அல்லாமல் அமெரிக்க வரலாற்று முக்கிய சம்பவமாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் டொனால்டு டிரம்ப் மீதான வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்ற கணிப்புகள் காட்டுத்தீ போல பரவியுள்ளது. இதன் வாயிலாக நீண்ட காலத்திற்கு பின்பு கிரிப்டோகரன்சியின் பிட்காயின் 60,000 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் ஆரம்பம் முதல் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், சனிக்கிழமை பென்சில்வேனியாவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் மூலம் அவர் 2வது முறையாக ஆட்சியை பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் கிரிப்டோ மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் டொனால்டு டிரம்ப் வலது காதில் காயம் ஏற்பட்டது, ஆனாலும் தற்போது அவர் "நன்றாக" இருப்பதாகவும், திங்கள்கிழமை மில்வாக்கியில் தொடங்கும் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்குச் செல்ல தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கில் மதியம் 1:05 மணி நிலவரப்படி பிட்காயின் 2.7% அதிகரித்து 60,160.71 டாலராக உயர்ந்துள்ளது. பிளாக்ராக் இன்க் மற்றும் ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் உள்ளிட்ட மாபெரும் முதலீட்டு நிறுவனங்களின் ETF-களும் தடுமாற்றத்தில் இருந்து மீண்டு நிலையான வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது.
காயின்மார்கெட் கேப் தளத்தின் படி இன்றைய வர்த்தகத்தில் பிட்காயின் மதிப்பு 3.72% உயர்ந்து 60,178.93 டாலராக உள்ளது. டாப் 10 கிரிப்டோகரன்சியில் அமெரிக்க டாலர் அடிப்படையிலான டெதர், USDC ஆகியவற்றை தவிர அனைத்தும் வளர்ச்சி பாதையில் உள்ளது.


Click it and Unblock the Notifications