அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அதானி குழும பங்குகள் கடும் சரிவினை கண்டு வருகின்றன. இது ஒரு புறம் எனில், மறுபுறம் அதானி குழுமத்தில் முதலீடு செய்ய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியது.
ஆரம்பத்தில் இருந்தே அதானி குழுமத்திற்கு ஆதரவாக பிரதமர் மோடி இருப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.
எதிர்கட்சிகள் குற்றம்
இது குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக கூறப்படாத நிலையில், நாடாளுமன்றத்திலும் இது குறித்து பேச அனுமதிக்கப்படவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அதானி குழும விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்த போராட்டமே நடத்தின.
அமித்ஷா விளக்கம்
இந்த நிலையில் தான் ஹிண்டர்ன்பர்க் - அதானி குழும விவகாரம் குறித்து பாரதிய ஜனதா கட்சி மறைக்கவோ அல்லது பயப்படவோ எதுவுமே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவிப்பது என்பது சரியாக இருக்காது என்றும் கூறினார்.
ANI-ஐக்கு அளித்த பேட்டி
கெளதம் அதானியின் அதானி குழுமத்திற்கு தொடர்ந்து, ஆளும் கட்சி ஆதரவளித்து வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும் இதில் பாஜக மறைப்பதற்கும் பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்றும் ANI-ஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி
இது குறித்து ராகுல் காந்தி அதானி குழுமத்திற்கு, மத்திய அரசு பல வழிகளில் உதவியதாக குற்றம் சாட்டியுள்ளார். அதானி குழும பங்குகளை உயர்த்த அதானி குழுமம் பல மோசடிகளில் ஈடுப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வருகின்றன. 2014ல் 600-வது இடத்திற்கு மேலாக இருந்த கெளதம் அதானி, எப்படி கடந்த ஆண்டில் 2வது இடத்திற்கு முன்னேறினார், கடைசி மூன்று ஆண்டுகளில் மட்டும் அதானி குழுமத்தின் பங்கு 8 பில்லியன் டாலரில் இருந்து, 140 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
வணிகத்தை மேம்படுத்தும் கொள்கை
அதானி குழுமத்திற்கு அண்டை நாடுகளில் கிடைத்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் உதவி இருப்பதாகவும் மறைமுகமாக ராகுல் காந்தி தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தார். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், நாட்டின் வெளியுறவுக் கொள்கை அதானியின் வணிகத்தை மேம்படுத்தும் கொள்கை என விமர்சனம் செய்துள்ளார்.
பல ஒப்பந்தங்கள்
அதானி குழுமம் எப்படி பங்களாதேஷில் ஒப்பந்தங்களைப் பெற்றது, இலங்கையில் மின் திட்டம், எஸ்பிஐ-யிடம் இருந்து கடன் சலுகைகளைப் பெற்றது, மும்பை விமான நிலையத்தை நடத்தியவர்களை ஏஜென்சிகள் அச்சுறுத்தியதை அடுத்து அதானி கையகப்படுத்தியது என்பது குறித்து ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளை வலியுறுத்தினார்.
உண்மை என்ன?
மொத்தத்தில் அதானி குழுமத்தின் மீது அதிகரித்து வரும் இந்த அழுத்தத்தின் மத்தியில், முழுமையான அறிக்கையினை செபி வெளியிட்டால் மட்டுமே, உண்மை என்ன என்பது முழுமையாக தெரியவரும்.


Click it and Unblock the Notifications