குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படும் நிலையில் ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்பார்ப்பும் குஜராத் பக்கம் திரும்பியுள்ளது.
குஜராத் நேற்று இன்று மட்டும் அல்லாமல் சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே இந்திய அரசியலில் மிகவும் முக்கியமான பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரப் போராட்டம்
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் முக்கியப் பங்கு வகித்த மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் போன்ற தலைவர்களின் சொந்த மாநிலமாக இருந்ததால், குஜராத் எப்போதும் இந்தியாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருந்தது.

அம்பானி, அதானி
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் குஜராத்-ஐ பூர்வீகமாகக் கொண்டு இருப்பவர்கள் என்பதால் வர்த்தக ரீதியில் குஜராத் நாட்டின் முக்கியமான மாநிலமாக விளங்குகிறது.
இந்த நிலையில் குஜராத் பொருளாதாரம் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை இப்போது பார்ப்போம்.

பாரதிய ஜனதா கட்சி
பாரதிய ஜனதா கட்சி 1995 முதல் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது, ஆனால் 1996 ஆண்டின் பிற்பகுதியிலிருந்து 1998 ஆம் ஆண்டின் முற்பகுதி வரையிலான குறுகிய காலத்தைத் தவிர, குஜராத் மாநிலத்தில் பிஜேபி ஆட்சியில் உள்ளது. துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் மார்ச் 1998ல் இருந்து இடைவேளையின்றி ஆட்சி செய்து வருகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இன்னுமொரு 5 ஆண்டுக் காலம் பிஜேபி ஆட்சியில் இருந்தால் இடைவிடாமல் 29 ஆண்டுகள் ஆட்சியைத் தக்கவைத்த பெருமையைக் கொண்டு இருக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மேற்கு வங்கத்தில் சுமார் 34 ஆண்டுகள் (1977 முதல் 2011 வரை) தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

நரேந்திர மோடி
இந்தியாவின் பிரதமராக 2 முறை தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு நரேந்திர மோடி மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று 12 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சராக இருந்தார். மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் தான் குஜராத் மாடல் வளர்ச்சி என்ற சொல் உருவானது.

குஜராத் மாநிலம்
குஜராத் மாநிலத்தின் இன்றைய நிலைக்கு மார்ச் 1998 முதல் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி, 12 ஆண்டுகள் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி முக்கியக் காரணம் என்றால் மிகையில்லை.

SDP அளவு
இந்தியாவுக்கு எப்படி ஜிடிபி அளவோ அதேபோல் மாநிலங்களுக்கு எஸ்டிபி. இந்தியாவின் 6 முன்னணி பொருளாதார மாநிலங்களில் குஜராத் 4வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடத்தில் மகாராஷ்டிரா, தமிழ் நாடு, கர்நாடகா ஆகியவை உள்ளது.
ஆர்பிஐ தரவுகள் படி 2022-21 ஆம் நிதியாண்டில் குஜராத்-ன் எஸ்டிபி அளவு 14.6 லட்சம் கோடி ரூபாய்.1994-95 ஆம் நிதியாண்டில் இதன் அளவு 52,013 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது.
தமிழ்நாட்டின் எஸ்பிடி அளவு 1994-95 ஆம் ஆண்டில் 54,131 கோடி ரூபாயில் இருந்து 2022-21 ஆம் நிதியாண்டில் 16.2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தனிநபர் வருமானம்
ஆர்பிஐ தரவுகள் படி 2022-21 ஆம் நிதியாண்டில் குஜராத்-ன் தனிநபர் வருமானம் அளவு 2.12 லட்சம் ரூபாய்.1994-95 ஆம் நிதியாண்டில் இதன் அளவு 11,810 ரூபாய் மட்டுமே.
தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் அளவு 1994-95 ஆம் ஆண்டில் வெறும் 9,353 ரூபாயில் இருந்து 2022-21 ஆம் நிதியாண்டில் 2,12,174 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் 6 முன்னணி தனிநபர் வருமானம் பெறும் மாநிலங்களில் குஜராத் 4வது இடத்தில் உள்ளது. முதல் 3 இடத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகியவை உள்ளது.

வேலைவாய்ப்பின்மை அளவு
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது வேலைவாய்ப்பின்மை அளவு தான்.
குஜராத் மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு 2 இரண்டு காலகட்டத்தில் நகரம் மற்றும் கிராமம் ஆகிய பகுதிகளில் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தரவுகள் அனைத்தும் 1000 பேருக்கான அளவுகள்
கிராமம் (2022-21) - 8
கிராமம் (1999-2000) - 4
நகரம் (2022-21) - 46
நகரம் (1999-2000) - 20

இதேபோல் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவுகள்
கிராமம் (2022-21) - 48
கிராமம் (1999-2000) - 20
நகரம் (2022-21) - 58
நகரம் (1999-2000) - 40

பணவீக்கம்
குஜராத் மாநிலத்தின் பணவீக்கம் 2017-18 முதல் 2.6 சதவீதம் முதல் 2021-22 ல் 4.9 சதவீதமாக அதிகரித்தாலும், இப்பட்டியலில் இருக்கும் டாப் 6 மாநிலங்களில் குஜராத் தான் குறைவான பணவீக்க அளவீட்டை வைத்துள்ளது.
மகாராஷ்டிரா - 5.2 சதவீதம்
தமிழ்நாடு - 5.2 சதவீதம்
கர்நாடகா - 5.6 சதவீதம்
உத்தரப் பிரதேசம் - 5.1 சதவீதம்
மேற்கு வங்காளம் - 5.1 சதவீதம்
கேரளா - 4 சதவீதம்
இந்தியாவின் சராசரி அளவு 5.5 சதவீதம்

ஊதியம்
இந்தியாவின் பொருளாதாரத்தில் விவசாயத் துறை முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில் விவசாயத் துறையில் ஒருவர் எவ்வளவு வருமானம் பெறுகிறார் என்பதன் அடிப்படையில் தான் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சி அமையும்
அந்த வகையில் 2020-21 ஆம் நிதியாண்டில் விவசாயத் துறையில் ஊரகப் பகுதிகளில் ஆண் ஊழியர்களுக்குக் குஜராத்தில் தினசரி ஊதியமாக 220 ரூபாய் பெறுகின்றனர். தமிழ்நாட்டில் இதன் அளவு 446 ரூபாய்.
மகாராஷ்டிரா - 284 ரூபாய்
கர்நாடகா - 335 ரூபாய்
உத்தரப் பிரதேசம் - 288 ரூபாய்
மேற்கு வங்காளம் - 305 ரூபாய்
கேரளா - 727 ரூபாய்
இந்தியாவின் சராசரி அளவு 323 ரூபாய்

உள்கட்டமைப்பு
மத்திய மின்சார ஆணையம், ஏழு மாநிலங்களில் தனிநபர் மின் நுகர்வு அளவைக் காட்டுகிறது. எந்தவொரு பொருளாதாரத்திலும் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பிற்கு மின் நுகர்வு ஒரு நல்ல அளவுகோளாகப் பார்க்கப்படுகிறது.
அப்படிப் பார்க்கும் போது குஜராத்தின் தனிநபர் நுகர்வு இந்த 7 மாநிலங்களில் மிக அதிகமாக உள்ளது.
குஜராத் - 2239 kwh
தமிழ்நாடு - 1714 kwh
மகாராஷ்டிரா - 1588 kwh
உத்தரப் பிரதேசம் - 663 kwh
மேற்கு வங்காளம் - 733 kwh
கேரளா - 844 kwh

சுகாதார அளவீடுகள்
பொதுவாகப் பெரிய பொருளாதார நாடுகள், மாநிலங்களில் சுகாதாரச் சேவைகளும், கட்டமைப்புகளும் சிறந்து விளங்கும். ஆனால் குஜராத் மாநிலத்தில் 6 மாநிலங்களில் பெரிய அளவில் பின்தங்கியுள்ளது. அதேவேளையில் சிறிய மாநிலமான கேரளா இதில் முன்னேறி முதல் இடத்தில் உள்ளது.
குழந்தை இறப்பு விகிதம் (1000 பேருக்கு) - 23
தாய் இறப்பு விகிதம் (1 லட்சம் பிரசவத்திற்கு) - 70
6- 59 மாத குழந்தைகள் இரத்த சோகையின் பாதிப்பு (2021 தரவு) - 80%
15 -49 வயதான கர்ப்பிணி தாய்மார்களிடையே இரத்த சோகையின் பாதிப்பு - 63 சதவீதம்
அரசாங்கத்திற்குச் சொந்தமான மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை (2019) - 29,408