இந்திய மக்கள் பொதுவாக கடைக்கு சென்று மளிகை பொருட்கள், காய்கறி வாங்கும் போது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி-யை இலவசமாக பெறுவது வழக்கம். இது கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், தக்க வைக்கவும் கையாளும் ஒரு யுக்தியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி-யை இலவசமாக கேட்டுள்ளார் ஒருவர், இதுகுறித்த பதிவு டிவிட்டரில் டிரெண்டாகி Blinkit சிஇஓ மனசை கரைத்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய குவிக் காமர்ஸ் தளமாக இருக்கும் பிளிங்கிட் நிறுவனம், வாடிக்கையாளர்களின் காய்கறி ஆர்டர்களுடன் இலவசமாக கொத்தமல்லி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த புதிய அம்சம் எப்படி உருவானது என்பது தான் சுவாரஸ்யமான கதை. பிளிங்கிட் செயலியில் காய்கறிகள் ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளர், கொத்தமல்லிக்கு தனியாக பணம் செலுத்த வேண்டியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பொதுவாக காய்கறி கடைகளில் காய்கறிகளை வாங்கும்போது, இலவசமாக கொத்தமல்லி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், ஆன்லைன் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஷாப்பிங் செயலிகளில் அப்படி நடக்காது. இந்த நிலையில் கொத்தமல்லியை காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்பதை கேட்டு இந்த வாடிக்கையாளரின் தாயார் ஆச்சரியமடைந்தார். இதை அந்த வாடிக்கையாளர் சமூக வலைத்தளமான X-ல் பகிர்ந்து கொண்டார்.
இந்த பிரச்சனைக்கு தீர்வாக குறிப்பிட்ட அளவு காய்கறிகளை வாங்கும்போது இலவசமாக கொத்தமல்லி வழங்கும் ஒரு சலுகையை பிளிங்கிட் வழங்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த பதிவு காடு, மலை எல்லாம் சுத்தி பிளிங்கிட் நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திண்ட்சாவின் கவனத்திற்கு சென்றது.
"பிளிங்கிட்டில் கொத்தமல்லி இலவசமாக இல்லை என்பதை பார்த்ததும் அம்மா கிட்டத்தட்ட மயக்கமடைந்து விட்டார்," என்று அவர் X-ல் எழுதியிருந்தார். இதை பார்த்து மனமிறங்கிய Blinkit சிஇஓ உடனே ஒரு முடிவை எடுத்தார்.

இந்த வாடிக்கையாளரின் பதிவை தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் கருத்துக்களை மதிக்கும் விதமாக பிளிங்கிட் சிஇஓ அல்பிந்தர், உடனடியாக அவருடைய பரிந்துரைக்கு பச்சைக் கொடி காட்டினார்.
மே 16, 2024 அன்று X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்ட சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா "இலவச கொத்தமல்லி ஆஃபர் இப்போது செயல்பாட்டில் உள்ளது! அனைவரும் தயவுசெய்து அங்கித்தின் அம்மாவுக்கு நன்றி சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டு, காய்கறிகள் சிலவற்றையும் இலவச கொத்தமல்லியையும் கொண்ட பிளிங்கிட் கார்ட்டின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்தார்.
இலவச கொத்தமல்லி பெற குறைந்தபட்ச ஆர்டர் தொகை அல்லது காய்கறிகளின் அளவு ஆகியவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதையும் விளக்கிய சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா சோதனை முறையில் இதை செக் செய்ய உள்ளார். "அடுத்த சில வாரங்களில் இந்த அம்சத்தை மேம்படுத்துவோம்" என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக கவனித்து செயல்படுத்திய பிளிங்கிட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. காய்கறி கடை அனுபவத்தை ஆன்லைன் ஷாப்பிங்கிலும் கொண்டு வரும் இந்த யுக்தி, நிச்சயமாக பிளிங்கிட் நிறுவனத்திற்கு சாதகமான பலனை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications