நாட்டில் குவிக் காமெர்ஸ் தளங்களின் அதிகரிப்பு மக்களிடையே பிரபலமடைந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்த தளங்களில் வழங்கப்படும் தள்ளுபடிகள் தான். பாரம்பரிய மளிகை கடைகளை விட ஆன்லைன் தளங்களில் அதிக சலுகைகள் வழங்கப்படுவதால் ஆன்லைன் ஷாப்பிங் பெரும்பாலானவர்களிடையே விரும்பப்படுகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள், நகைகள், காலணிகள் என பலவற்றையும் டெலிவரி செய்கிறது. இந்நிலையில் மளிகை பொருட்களை மட்டுமே டெலிவரி செய்து வந்த பிளிங்கிட் நிறுவனம் தற்போது எலக்ட்ரானிக் பொருட்களையும் டெலிவரி செய்யவுள்ளதாக அறிவித்திருக்கிறது.
பிளிங்கிட் நிறுவனம் தற்போது மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், ஸ்நாக்ஸ் வகைகள், குளிர்பானங்கள், பேக்கரி பொருட்கள், அரிசி பருப்பு போன்ற சாமான்கள், உலர்ந்த பழங்கள், கோழி கறி, மீன் போன்ற அசைவ உணவு வகைகள், ஆர்கானிக் மற்றும் பிரீமியம் பொருட்கள், பேபி கேர் பொருட்கள், மருந்து பொருட்கள், டிடர்ஜென்ட் பொருட்கள், வீடு மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் ஐஸ்கிரீம்கள் மற்றும் ப்ரோசன் டெசர்ட் வகைகள் போன்றவற்றை டெலிவரி செய்து வருகிறது.

தற்போது கேமிங் கன்சோல்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், லக்கேஜ் போன்ற பெரிய பொருட்களையும் டெலிவரி செய்து தனது சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது. இதற்காக டெல்லி NCR-இல் பிளிங்கிட் நிறுவனம் தனது சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
INC 42-இன் அறிக்கையின் படி பிளிங்கிட் நிறுவனம் பிளேஸ்டேஷன் கன்சோல்கள், ஏர் பிரையர்கள் மற்றும் ஏர் ப்யூரிஃபையர்கள் போன்ற பெரிய தயாரிப்புகளை பத்திரமாக டெலிவரி செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிளிங்கிட் நிறுவனத்தின் புதிய சேவை அதன் சராசரி ஆர்டர் மதிப்பை உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது போன்ற உயர்மதிப்புடைய பொருட்களை 30 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்வதற்காக டார்க் ஸ்டோர்களை அமைத்து இருக்கிறது. டார்க் ஸ்டோர்கள் என்பது ஆன்லைன் இ-காமர்ஸ் தலங்கள் மூலம் டெலிவரி செய்யப்படும் பொருட்களை சேமித்து வைப்பதற்கான இடம்.
தற்போது பிளிங்கிட் நிறுவனத்தின் சராசரி ஆர்டர் மதிப்பு 706-ஆக உள்ளது. கடந்த வருடம் இந்த மதிப்பு 660-ஆக இருந்தது. அதிலிருந்து இன்று வரை 8% அதிகரித்துள்ளது. பிளிங்கிட் தனது புதிய சேவையின் மூலம் விரைவு வர்த்தகத் துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்குமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications