இந்தியாவே எதிர்பார்த்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ முடிந்து அதன் பங்குகள், இன்று மும்பை பங்குச்சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையிலும் அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிட்டது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ விலையான ரூ.1,119 அளவீட்டைக் காட்டிலும் சுமார் 21.36 சதவீதம் உயர்வில் ரூ.1,358 விலையில் பங்குச்சந்தைக்கு வந்துள்ளது.
மேலும் பட்டியலிடப்படும் நாளிலேயே இந்தியாவிலேயே அதிக மதிப்புடைய நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாகவும் உயர்ந்துள்ளது. ஜியோ ஐபிஓ 10.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டியலிடப்பட்ட நிலையில் இந்த 21 சதவீத ப்ரீமியம் விலை லிஸ்டிங் மூலம் ஜியோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 12.6 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி ஐபிஓ வாயிலாக ரூ.30,213 கோடி முதலீட்டை திரட்டி இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட்டு அதை வெற்றிகரமாகவும் முடித்துள்ளது. இதற்கு முன்பு ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ரூ.27,870 கோடி என் மாபெரும் ஐபிஓவை வெளியிட்டு சாதனை படைத்திருந்த நிலையில் அதை உடைத்து புதிய சாதனையைப் படைத்தது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் முதல் நாளே மார்ஜினல் டிரேடிங்-ல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்டியலிடப்பட்ட பின்பு 1 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. தற்போது ஜியோ பங்குகள் 1357.70 ரூபாயில் வர்த்தகமாகி வரும் வேளையில் நோமுரா 1340 ரூபாய் டார்கெட் விலையுடன் BUY ரேட்டிங் கொடுத்துள்ளது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ தொடங்கிய 100 நிமிடங்களுக்குள் அனைத்து ஐபிஓ பங்குகளும் முழுமையாக வாங்கப்பட்டது, ஐபிஓ முடிவில் 22 மடங்கு அதிக முதலீட்டைப் பெற்றது, ஆங்கர் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது என ஆரம்பம் முதல் இறுதி வரையில் வெற்றி வெற்றி மட்டுமே காட்டிய ஜியோ நிறுவனம் இன்று முதலீட்டாளர்களுக்கு ஆரம்பத்திலேயே 21 சதவீத லாபத்தைக் கொடுத்துள்ளது.
இன்று காலை நடந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பட்டியலிடும் நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் பேசினர். இதில் முக்கியமாக ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் தலைவரான ஆகாஷ் அம்பானி பேசுகையில், இந்தியாவின் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதிற்குப் பெருமை கொள்கிறோம். ஜியோவின் ஐபிஓ வெற்றி நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பெரியதாக அமைந்தது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பட்டியலிடப்படுவது என்பது முடிவு அல்லா துவக்கப் புள்ளியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
என்எஸ்ஈ நிர்வாக தலைவரும், சிஇஓ-வுமான ஆஷிஷ்குமார் சௌஹான் பேசும்போது, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிட்டது மூலம் தேசிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குரூப்-ல் இருந்து பட்டியலிடப்படும் 12வது நிறுவனம் என தெரிவித்தார். இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் 3138வது நிறுவனமாக ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பட்டியலிடப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் என்எஸ்ஈ 1994ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, இங்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 127 மடங்கு உயர்ந்து தற்போது 455 லட்சம் கோடி வரையில் உயர்ந்துள்ளது, தற்போது ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் 10.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

