சென்னை: சமீபத்தில் வளைகுடா நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் வகையில், வளைகுடா கூட்டுறவு கவுன்சில் புதிய ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவை அறிமுகம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. "GCC Grand Tours" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விசா மூலம், பயணிகள் ஆறு வளைகுடா நாடுகளுக்கும் அதிகப்படியாக 30 நாட்கள் தங்கி பயணம் செய்யும் வசதியை அளிக்க உள்ளது.
இந்த அறிவிப்பு வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று புதிதாக 10 வருட விசா-வை அறிமுகம் செய்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் குறிப்பிடத்தக்க பணிகளையும், பங்களிப்பு செய்துள்ள தனிநபர்களுக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு புதிய 10 ஆண்டு கால விசாவை (Blue Residency Visa) அறிமுகப்படுத்தியுள்ளது. கடல், நிலம் என சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணிகளை மேற்கொண்டவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த புதிய விசா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
துபாய் பிரதமர் மற்றும் அரசரான ஷேக் முகமது பின் ராஷித் இந்த புதிய விசா திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். சமூக வலைத்தளமான X தளத்தில் வெளியிட்ட பதிவில், 2024 ஆம் ஆண்டு, நம்நாட்டிற்கு நிலைத்திருப்புத்திறன் ஆண்டாக (Year of Sustainability) கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவரது பதிவில், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் கடல், நிலம், காற்று தூய்மை மற்றும் இத்துறை சார்ந்த நவீனத் தொழில்நுட்பங்கள், circular economy உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பணியாற்றிய தனிநபர்களுக்கு வழங்கப்படும் 10 ஆண்டுகள் கால நீண்ட கால குடியிருப்பு விசாவான "Blue Residency Visa" திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கச்சா எண்ணெய், எரிவாயு மூலம் தனது பொருளாதாரத்தைக் கட்டமைத்து வரும் வேளையில், உலக நாட்டு மக்கள் இப்பகுதியைச் சிறப்பான வாழ்விடமாகக் கருத வேண்டும் என்பதற்காக வர்த்தகம் முதல் வாழ்வியல் வரையில் பல துறையில் அந்நாட்டை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலகமே எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனையான சுற்றுசூழல் பாதிப்பை சிறப்பாக கையாளும் விதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு உலக நாடுகளில் இருக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் இந்த ப்ளூ ரெசிடென்சி விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications