2018ம் ஆண்டில் குருகிராமை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவமான ப்ளூ ஸ்மார்ட், நாட்டில் முதல் முறையாக முழுக்க முழுக்க மின்சார வாகனங்களை கொண்டு வாடகை கார் சேவையை அறிமுகம் செய்தது. இந்த ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை தொடங்கியவர்கள், இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் புரோமோட்டர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர்தான்.
தோனி
ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் மின்சார மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் சேவை என்ற ஐடியா பல பிரபலங்களை முதலீடு செய்ய தூண்டியது. கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, நடிகை தீபிக படுகோன், பிரபல தொழிலதிபர் சஞ்சீவ் பஜாஜ் மற்றும் பாரத் பே இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் ஆகியோர் எதிர்காலத்தில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில், ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் மின்சார வாகனங்கள் வாங்குவதற்காக வாங்கிய கடனை, சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது உள்ளிட்டதனிப்பட்ட செலவுகளுக்காக அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர் பயன்படுத்தியதாக செபி குற்றம் சாட்டியது. நிறுவனர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் செயல்பாட்டு செலவினங்களுக்கு தேவையான நிதியை திரட்ட முடியாததால் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் தனது டாக்சி சேவையை காலவரையின்றி நிறுத்தியது.
வங்கிகள்
தற்போது, ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்துக்கு கடன் கொடுத்தவர்கள் (வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தனிநபர்கள் உள்பட) மற்றும் குத்தகைதாரர்கள் தங்களது பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடு தொடங்கியுள்ளனர். ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்திடம் உள்ள 1,500 முதல் 2,000 கார்களை விற்பனை செய்து தங்களது பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் அவர்கள் உள்ளனர்.
அதேவேளையில், எவரெரா மற்றும் எவரெஸ்ட் ஃப்ளீட் ஆகிய மின்சார டாக்ஸி சேவை நிறுவனங்கள், ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் கார் பிரிவை வாங்கும் நிலையில் உள்ளன. எவரெரா ஏற்கனவே 300 மின்சார வாகனங்களை தனது பிரிவில் சேர்த்துள்ளது. மேலும் 800 முதல் 1,000 கார்களை குத்தகைக்கு எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. எவரெஸ்ட் ஃப்ளீட் நிறுவனம் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் சில கார்களை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
குத்தகைதாரர்கள்
மறுபுறம், ஜப்பானின் ஓரிக்ஸ் லீசிங், டெல்லியை சேர்ந்த கிளைம் பைனான்ஸ், ஆட்டோமொடிவ் லீசிங் நிறுவனமான எஸ்எம்ஏஎஸ் ஆட்டோ லீசிங் மற்றும் பெங்களூரை சேர்ந்த ஷெஃபாஸ்டெக் ஓபிசி பிரைவேட் லிமிடெட் உள்பட பல குத்தகைதாரர்கள், ப்ளூ ஸ்மார்ட் அல்லது அதன் தொடர்புடைய நிறுவனமான ஜென்சோல் இன்ஜினியரிங் தாங்கள் வழங்கிய வாகனங்களில் மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்குவதை தடுக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாவிட்டால், அவை அனைத்தும் மதிப்பை இழந்து பயன்படுத்த முடியாததாகி விடும் அபாயம் உள்ளது. பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படாவிட்டால் அல்லது பயன்படுத்தப்படாவிட்டால், கார்கள் இயக்கப்படாவிட்டால் அவற்றின் செயல்திறன் மோசமடைந்து இறுதியில் அவை பொறுப்பாக மாறும் என்பதே நிலைமையாக உள்ளது என்று மின்சார வாகன துறையை சேர்ந்த ஒருவர் எச்சரிக்கை செய்தார்.


Click it and Unblock the Notifications