இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலேயே அதிகமாக ஹெட்போன், ஈயர்போன், TWS பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக திகழும் Boat என்னும் ஆடியோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்திய அரசு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மாபெரும் திட்டத்தை வகுத்துள்ள நிலையில், இத்துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் அதிகப்படியான நம்பிக்கை உள்ளது.
இதைப் பயன்படுத்திப் போட் நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளார்.
ஐபிஓ
இந்திய பங்குச்சந்தையில் சமீபத்தில் புதிய டெக் நிறுவனங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு கொடுக்கப்பட்டாலும், காலாண்டு முடிவுகள் வெளியீட்டுக்குப் பின்பு பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இருப்பது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனால் முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர்.
போட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்
ஆனால் போட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக இருக்கும் காரணத்தால் முதலீட்டாளர்கள் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது போட் நிறுவனம் இந்திய சந்தையில் 2000 கோடி ரூபாய் தொகைக்கு ஐபிஓ வெளியிடுவதற்காகச் செபி அமைப்பிடம் DRHP அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தயாராகி வருகிறது.
வார்பெர்க் பின்கஸ்
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போட் நிறுவனம் 1.5-2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 2000 கோடி ரூபாய் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. போட் நிறுவனத்தில் தனியார் முதலீட்டு நிறுவனமான வார்பெர்க் பின்கஸ் நிறுவனம் மட்டும் சுமார் 36 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த ஐபிஓ-வில் வார்பெர்க் பின்கஸ் மட்டும் 700 முதல் 800 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
அமன் குப்தா, சமீர் மேத்தா
மேலும் போட் நிறுவனத்தின் நிறுவனர்களான அமன் குப்தா, சமீர் மேத்தா ஆகியோர் இந்நிறுவனத்தில் 56 சதவீத பங்குகளை வைத்துள்ளனர். இந்த ஐபிஓ-வில் பெரும் பகுதி பங்குகளை அமன் குப்தா, சமீர் மேத்தா விற்பனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமன் குப்தா, சமீர் மேத்தா, வார்பெர்க் பின்ஸ் மட்டுமே 92.4 சதவீத பங்குகளை வைத்துள்ள நிலையில் குவால்கம் 2.6 சதவீத பங்குகளும், பையர்சைட் வென்சர்ஸ் 3.7 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.
1500 கோடி ரூபாய் வருவாய்
2016ல் துவங்கப்பட்ட போட் நிறுவனம் இந்தியாவிலேயே D2C பிரிவில் இருக்கும் முக்கியமான நிறுவனமாகத் திகழ்கிறது. மார்ச் 31, 2021 உடன் முடிந்த நிதியாண்டில் போட் நிறுவனம் 1500 கோடி ரூபாய் வருவாய் உடன் 78 கோடி ரூபாய் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. போட் நிறுவனத்தின் மீது உங்கள் கருத்து என்ன..? போட் நிறுவனத்தின் ஐபிஓ-வில் முதலீடு செய்ய உங்களுக்கு ஆர்வம் உள்ளதா..? என்பதைக் கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications