உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளா பலரின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது. அப்படித்தான் இந்த கும்பமேளாவை பயன்படுத்தி வறுமையில் வாடிய படகோட்டி கோடிகளில் சம்பாதித்துள்ளார். ஒரு காலத்தில் வாழ்க்கை நடத்தவே சிரமப்பட்ட ஒரு படகோட்டி, இந்தக் கும்பமேளாவில் தன்னுடைய படகை அதிகரிக்கும் நோக்கில் குடும்ப நகைகளை விற்று படகு வாங்கியுள்ளார். அதை வைத்து வெறும் 45 நாட்களில் ரூ. 30 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
அரைல் பகுதியைச் சேர்ந்த பிந்து மஹ்ரா, இந்த மதக் கூட்டத்திற்காக தனது படகு எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார். தலைமுறை தலைமுறையாக படகு தொழிலில் ஈடுபட்டு வரும் பிந்து மஹ்ராவின் குடும்பம் ஆரம்பத்தில் நகைகளை விற்று படகு வாங்க தயங்கியது. ஏனெனில் இது மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தும் அபாயமும் இருந்தது.

மூதாதையர்கள் சேர்த்து வைத்த தங்கத்தை விற்று, நிலத்தை அடமானம் வைத்து படகு விரிவாக்கம் தேவையா? என யோசித்தனர். ஆனால் உலகிலேயே மிகப்பெரிய ஆன்மீக ஒன்று கூடலான பிரயாக்ராஜில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பிந்துவின் தொலைநோக்குப் பார்வை மிகப்பெரிய வெற்றி கண்டது. அவருடைய படகில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏறி செல்லத் தொடங்கினர். இது அவரது குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை புதிய உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. முன்னேபோதும் இல்லாத அளவுக்கு இதன் மூலம் பிந்துவின் குடும்பம் வருமானம் ஈட்டியது.
என் கணவர் இறந்த பிறகு எங்கள் குடும்பம் கடினமான காலங்களை சந்தித்தது. இத்தகைய வெற்றியை நாங்கள் கனவிலும் நினைத்ததில்லை. இன்று நாங்கள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பிந்து மஹ்ராவின் தாயார் சுக்லாவதி தேவி தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிந்துவின் பயணத்தை மகா கும்பமேளா உருவாக்கிய பொருளாதார வாய்ப்புக்கான உதாரணமாக குறிப்பிட்டு பேசினார். இதையடுத்து பிந்துவின் கதை தேசிய அளவில் புகழ்பெற்றது. சட்டமன்றத்தில் பேசிய யோகி ஆதித்யநாத் கும்பமேளா அம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் ரூ. 3.5 லட்சம் கோடிக்கு பங்களித்ததாக தெரிவித்தார். உள்ளூர் வணிகங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் போக்குவரத்து துறை போன்றோருக்கு இந்த கும்பமேளா பலனளித்தது என்று கூறினார்.
பிந்துவின் கதை துணிச்சலும் தொலைநோக்குப் பார்வையும் இணைந்தால் எந்த நிலையில் இருந்தும் வெற்றி காணலாம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. வறுமையில் வாடிய ஒரு குடும்பம் மகா கும்பமேளாவை சிறப்பாக பயன்படுத்தி தங்கள் நிலையையே மாற்றிக் கொண்டுள்ளது. அன்று அவர் எடுத்த முடிவு குடும்பத்தின் நீண்ட கால பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தது மட்டுமல்லாமல்.. கடின உழைப்பின் பலனையும் பறைசாற்றியுள்ளது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications