ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, நியூயார்க் பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் 7%க்கும் மேல் சரிந்தன. 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்டு 650 அடி உயரும் கூட பறக்க முடியாமல் கிளம்பிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகி, விமானத்தில் பயணித்த 242 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம், போயிங் விமானங்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மாலை 2 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI 171, லண்டன் காட்விக் நோக்கி செல்ல தயாரானது.

இந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்டு சில நிமிடங்களில் விமானி மேடே அழைப்பு (Mayday call) விடுத்ததாக தெரிவிக்கப்பட்டாலும், அதற்கு பிறகு விமானத்தின் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டு மேகானி நகர் பகுதியில் இருக்கும் BJ மருத்துவ கல்லூரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
நியூயார்க் பங்குச் சந்தையில், விபத்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து, போயிங் நிறுவனத்தின் பங்குகள் முன்-வர்த்தகத்தில் 7.67% சரிந்து 197.58 டாலர் விலையில் வணிகமானது. புதன்கிழமை வர்த்தக முடிவு விலையான 214.00 டாலரை ஒப்பிடும்போது இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். கடந்த மூன்று மாதங்களில் 24% உயர்ந்திருந்த போயிங் பங்குகள், இந்த விபத்தால் தொடர்ந்து மூன்றாவது நாளாக இழப்பை சந்தித்துள்ளன.
இந்த விபத்து, போயிங் விமானங்களின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் ஒழுங்குமுறை குறித்து முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிக விமானப் போக்குவரத்து துறையில் வளர்ச்சி எதிர்கொண்டு வரும் வேளையில் இந்த சம்பவம் போயிங்கின் சமீபத்திய பங்கு மதிப்பு உயர்வுக்கு பெரும் பாதிப்பாக மாறியுள்ளது. நிறுவனத்தின் பங்கு விலை மேலும் பாதிக்கப்படலாம் என சந்தை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை. இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB) ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன. போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவும் இந்த விசாரணையில் பங்கேற்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications