சர்வதேச அளவில் புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் செயல்படுகிறது. இந்த நிறுவனம் தங்களுடைய உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் தங்களுடைய 777x விமானத்தை டெலிவரி செய்வதை ஒரு ஆண்டுக்கு தள்ளி போட இருப்பதாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக நஷ்டத்தை சந்தித்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 5 மில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டமடைந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் இதற்கு முக்கிய காரணம். இதனிடையே போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்க போகிறோம் எனக் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு சில சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவது கட்டாயமாகிவிட்டது என கூறியுள்ள அவர் சுமார் 17,000 பேரை வேலையில் இருந்து நீக்கப் போவதாக கூறியுள்ளார்.
போயிங் நிறுவனத்தில் வேலை செய்து வரக்கூடிய 33 ஆயிரம் அமெரிக்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாடல் விமானங்களை தயாரிப்பதில் தடை ஏற்பட்டு, குறித்த தேதியில் விமானங்களை டெலிவரி செய்ய முடியாத சூழல் உண்டாகி இருப்பதாக போயிங் தெரிவித்துள்ளது.
அடுத்து வரும் மாதங்களில் எக்ஸிக்யூடிவ் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் பெரும்பாலும் வேலையை இழக்கப் போகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அமெரிக்க சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் 1.1% வரை சரிவடைந்தன.
கடந்த சில ஆண்டுகளாகவே ஊழியர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் ஆர்ட்பெர்கர் ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற இந்த இரண்டு மாத காலத்திலும் ஊழியர்களுடன் சுமூகமான உடன்பாட்டினை அவரால் எட்ட முடியவில்லை. இதனால் ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது.
இதனிடையே பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானதை அடுத்து தங்களது வேலை பறிபோய்விடலாம் என்ற அச்சத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
நிதி நிலைமையை சீராக்கி நஷ்டத்தை சரி செய்யவும் அடுத்தடுத்த திட்டங்களை செயல்படுத்தவும் நிதி திரட்டுவதற்கு போயிங் முடிவு செய்துள்ளது. குறிப்பாக போயிங் நிறுவனம் பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் 10 முதல் 15 பில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்ட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Written by: Devika


Click it and Unblock the Notifications