ஒரு வீட்டை சொந்தமாக்குவது என்பது பலருக்கும் இருக்கும் பொதுவான கனவு. சிலர் தங்களிடம் இருக்கும் பட்ஜெட் அல்லது பரம்பரை சொத்து ஆகியவற்றை வைத்து தங்களுக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் சிலர் ஹோம் லோன்களை பெரிதும் நம்பி இருப்பார்கள். ஹோம் லோன்களை வாங்கும் நபர்கள் அசலை விட அதிக அளவில் வட்டி செலுத்த வேண்டும்.
எனவே ஹோம் லோன்களை சீக்கிரம் அடைப்பது உங்களுடைய நிதி நலனை பாதுகாப்பது மட்டுமின்றி தேவையற்ற வட்டி சுமையிலிருந்து உங்களை விடுவிக்கும். இந்தப் பதிவில் நீங்கள் வாங்கிய ஹோம் லோனுக்கு 8 சதவீத அதிக EMI செலுத்தி ஹோம் லோனை எப்படி சீக்கிரம் அடைப்பது என்று பார்ப்போம்.

ஹோம் லோன்களை எடுத்த ஒரு நபர் பெரும்பாலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக EMI செலுத்த வேண்டும். அதாவது அதற்கு வசூலிக்கப்படும் வட்டி அசல் தொகையை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக ஒரு நபர் 20 ஆண்டுகளுக்கு 9 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தில் ரூ.60 லட்சம் கடனை பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அந்த நபர் மாதாந்திர தவணையாக 53,984 ரூபாய் EMI செலுத்த வேண்டும். இதன் விளைவாக மதிப்பிடப்பட்ட வட்டி 69,56,054 ரூபாயாக இருக்கும். அதற்கு மொத்தமாக 1,29,56,054 ரூபாய் செலுத்த வேண்டும். அசல் தொகையை விட வட்டி அதிகமாக இருப்பதை இந்த உதாரணம் தெளிவாக விளக்குகிறது.
சிலர் யோசித்து கடன் காலத்தை நீட்டித்தால் EMI குறையும் என்று நினைக்கலாம். உதாரணமாக கடன் வாங்கியவர் 25 ஆண்டுகளில் ரூ.60 லட்சம் வீட்டுக் கடனை திருப்பி செலுத்த தேர்வு செய்திருந்தால் மதிப்பிடப்பட்ட EMI ரூ.50,352-ஆகக் குறையும். ஆனால் அதற்கு வட்டியாக 91,05,535 ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். வட்டியும் அசலும் சேர்த்து ரூ.1,51,05,535 செலுத்த வேண்டும்.
உங்கள் ரூ.60 லட்சம் கடனை எளிதில் வட்டிக் குறைவாக அடைத்து முடிக்க உங்கள் EMI தவணையை 8 சதவீதம் அதிகரித்தால் என்ன விளைவு ஏற்படும்? என்பதைப் பார்ப்போம். உங்கள் வீட்டுக் கடனில் 8% அதிகரித்தால் EMI தொகை ரூ.58,272 ரூபாயாக அதிகரிக்கும். இதன் மூலம் புதிய மதிப்பிடப்பட்ட மொத்த வட்டி தொகை ரூ.55,37,877-ஆகக் குறையும். அதே சமயம் மதிப்பிடப்பட்ட மொத்த வட்டி மற்றும் அசல் ரூ.1,15,37,877 ஆக குறையும். இதன் மூலம் உங்களுடைய கடன்காலம் 20 வருடங்களில் இருந்து 16.5 ஆண்டுகளாக குறையும்.
ஹோம் லோன்களை வாங்கி இருக்கும் நபர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்றார் போல் EMI தொகையுடன் குறிப்பிட்ட சதவீதத்தை அதிகரித்து செலுத்தி வரும்போது எந்த அளவுக்கு வட்டியை குறைவாக செலுத்தி கடனை முடிக்கலாம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications