சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், போஷ் (Bosch) மற்றும் சீமென்ஸ் (Siemens) நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளைத் தயாரிக்கும் பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனம், தனது உற்பத்தி திறனை விரிவாக்கம் செய்துள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய அதிகளவிலான முதலீடுகளைச் செய்து வருகிறது.
உற்பத்தி முதல் சேவைத் துறை வரையில் அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் போஷ் (Bosch) மற்றும் சீமென்ஸ் (Siemens) ஆகிய இரு ஜெர்மனி நிறுவனங்களும் சென்னையில் முதலீடு செய்து தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

போஷ் (Bosch) மற்றும் சீமென்ஸ் (Siemens) ஆகிய பிராண்டுகளின் இந்திய உற்பத்தியாளரான பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனம், உயர்ந்த திறன் கொண்ட போஷ் வாஷிங் மெஷின்களை இந்தியாவிலேயே தயாரிக்க இரண்டாவது அசெம்பிளி லைனை அமைப்பதற்காக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது.
தற்போது இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 60% உள்ளூரில் இருந்து தயாரிக்கப்பட பொருட்களை 2025 ஆம் ஆண்டிற்குள் 70%-75% வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. "ஜூலை மாதத்தில் 9 கிலோ மற்றும் 10 கிலோ திறன் கொண்ட போஷ் வாஷிங் மெஷின்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம்" என்று பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சைஃப் கான் தெரிவித்துள்ளார்.
டீஸ்வாஷர், ரிஃப்ரஜிரேட்டர், வாஷிங் மெஷின் மற்றும் பில்ட்-இன் குக்கிங் ரேஞ்ச் போன்ற ஹோம் அப்ளைன்சஸ் கருவிகளை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்திய டீஸ்வாஷர் சந்தையில் 48% சந்தை பங்கைக் கொண்டுள்ளது பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனம். பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனத்திற்கு, இந்தியா முக்கியமான சந்தை ஆகும், மேலும் இந்த ஆண்டு (CY2024) 2023ஆம் ஆண்டை விட 20%-25% வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக சைஃப் கான் தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.ஹெச். ஹோம் அப்ளைன்சஸ் நிறுவனத்திற்கு, தென்னிந்தியா மிகப்பெரிய சந்தையாகவும், 48% வர்த்தக பங்கீட்டை கொண்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் முறையே 24% மற்றும் 22% சந்தை பங்கீட்டை கொண்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் புதிய போஷ் பிராண்ட் ஸ்டோரை வியாழக்கிழமை திறந்து வைத்தது இந்த நிறுவனம்.


Click it and Unblock the Notifications