சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இனிவரும் மாதங்களில் இதே நிலை நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 200 டாலர்களை எட்டும் என்று அதிர்ச்சி அளிக்கும் அறிக்கைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் HR ராஜ்குமார் துபே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுபடுத்த ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார். அவருடைய கருத்துக்கள் வாகன ஓட்டிகளை சற்றே யோசிக்க வைக்கின்றன.
தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தற்போது மூன்றே மூன்று வழிகள் மட்டுமே இருப்பதாக ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார். முதலாவதாக பெட்ரோல் பங்குகளில் விலையை அதிகரிப்பது. அப்படியானால் போக்குவரத்துக்கு இனி அதிக செலவாகும். இரண்டாவதாக எண்ணெய் நிறுவனங்கள் இந்த நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு லாபத்தை குறைத்தால் ஓரளவுக்கு விலை உயர்வைத் தவிர்க்கலாம். ஆனால் இது நீண்ட காலத்திற்கு சாத்தியம் இல்லை. மூன்றாவதாக அரசே இந்த விலை உயர்வைக் குறைக்க நிதி ஒதுக்கினால் இந்த சுமையைக் குறைக்கலாம்.
முதன் முதலாக போர் பதற்றம் தொடங்கி எண்ணெய் விலை 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரித்த போது, இந்த விலை உயர்வு தற்காலிகமாக இருக்கும் என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது இருக்கின்ற சூழலை பார்க்கும்போது இதே நிலை தொடரும் என்றே தோன்றுகிறது. இன்னும் சில இடங்களில் எரிபொருள் உள் கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. அதை சரி செய்யவே நீண்ட காலம் எடுக்கும். இதற்கு மத்தியில் இந்த பதற்றமும் தொடர்ந்தால் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக மாறும் என்றும் ராஜ்குமார் கூறியுள்ளார்.

அனால் இவ்வளவு பிரச்சனைக்களுக்கு மத்தியிலும் இந்தியா தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகளும் மாற்று வழிகளும் தான் காரணம். ஹோர்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் 20 லட்சம் பேரல்களுக்கும் மேல் கச்சா எண்ணெய்யின் வரத்து தடைபட்டுள்ளது. ஆனால் இந்தியா ஒரே ஒரு நாட்டை மட்டும் நம்பி இல்லாமல் ரஷ்யா, ஆப்பிரிக்கா என பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது. இதற்கு முன்னர் சுமார் 20 நாடுகளில் இருந்து மட்டுமே கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. போர் பதற்றத்திற்கு பிறகு ரஷ்யா உள்ளிட்ட 40 நாடுகளில் இருந்து எண்ணெய் இந்தியாவிற்கு வருகிறது.
போர் பிரச்சனை பல சிக்கல்களை ஏற்படுத்தி இருந்தாலும், இந்தியாவை ஒரு சில நல்ல விஷயங்களையும் செய்ய தூண்டியுள்ளது. கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது அந்நியச் செலவாணி அதிகரிக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பசுமை ஆற்றலை நோக்கி இந்தியா வேகமாக நகரும். ஏற்கனவே இந்தியா 200 ஜிகா வாட்டுக்கும் அதிகமான சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறது. இதே போன்ற பிரச்சினை தொடர்ந்தால், இனி வரும் காலங்களில் உற்பத்தி இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதே போல இந்தியாவில் தற்போது வரையில் இயற்கை எரிவாயுவின் பங்கு 7 முதல் 8 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதை 15 சதவீதமாக மாற்றவும் பிரதமர் மோடி இலக்கு வைத்துள்ளார். மேலும் பெட்ரோலுடன் எத்தனாலை கலக்கும் திட்டமும் இந்தியாவிற்கு பெரிதும் உதவியுள்ளதாக ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார். இதனால் தான் 20 சதவீதம் வரையிலான பெட்ரோல் தட்டுப்பாடு குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இவர் சொல்வதை வைத்து பார்க்கும் போது பெட்ரோல் விலை இனி வரும் நாட்களில் உயரலாம். அதேநேரம் இந்தியாவும் வேறு சில மாற்று ஆற்றலை நோக்கி மாறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இதனால் எலக்ட்ரிக் வெகிகளின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கும்.


Click it and Unblock the Notifications