இந்தியாவில் உள்ள பெரும்பாலான சமையலறைகளின் இதயத்தில் இடம்பெற்றுள்ள ஒரு முக்கிய பொருள் என்றால் அது ஹாக்கின்ஸ் பிரஷர் குக்கர் எனலாம். இதில் ஒன்றும் மிகையில்லை.
பரம்பரை பரம்பரையாக இந்த பிரஷர் குக்கர்கள் சமையலுக்கு அத்தியாவசியமான, எளிதில் சமைக்க உதவிய பொருளாகும். சாதம் மட்டுமல்லாமல் விதவிதமான உணவுப் பொருட்களை இந்த குக்கரில் செய்யலாம். இப்படிப்பட்ட அற்புதமான குக்கரின் பின்னால் ஒரு சமையல் கலைஞர் மறைந்திருக்கிறார் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்?

இந்தக் கதை 1959 ஆம் ஆண்டில் தொடங்கியது. ஹெச்.டி.வாசுதேவா கடும் உழைப்பாளியான இந்தத் தொழிலதிபர் இந்திய சமையலறையில் மாபெரும் புரட்சியை செய்வதற்காக கிளம்பினார். எளியதொரு குடும்பத்தில் பிறந்தவர் வாசுதேவா, அவரது தொடக்கக் காலத்தில் நாட்டின் பிரிவினை பிரச்னைகள் முட்டுக்கட்டையாக விளங்கியது.
தனது வாழ்க்கையில் சந்தித்த பல சிரமங்களை அவர் சளைக்காமல் எதிர்கொண்டார். 1959 ஆம் ஆண்டில் அவரது 54 ஆவது வயதில் அவர் ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் லிமிட்டெட்டை தொடங்கினார். அதற்கான முதலீடு வெறும் ரூ.20,000. இன்றைய மதிப்பீட்டில் அது மிகப் பெரிய தொகைதான்.
உன்னிப்பாக ஆராய்ந்து தேர்ந்தெடுத்த தயாரிப்புகள், அர்ப்பணிப்போடு பணியாற்றிய ஊழியர்கள், மாறாத கொள்கைகள், நேர்மை, கடின உழைப்பு, வாடிக்கையாளர்களின் திருப்தி ஆகியவற்றின் அடிப்படையில் தனது நிறுவனத்தை வாசுதேவா நடத்தி வந்தார்.
அவரது தலைமையானது ஒருமைப்பாட்டுக்கான தளராத அர்ப்பணிப்புடனும் வாடிக்கையாளர் திருப்திக்காக இடைவிடாத உழைப்பையும் அடிப்படையாக இருந்தது. 1993 ஆம் ஆண்டில் வாசுதேவா காலமானபோது அவர் ஒரு சகாப்தமானார். எதிர்கால சந்ததியினருக்கும் அவர்களது சமையல் தேவைக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்கிச் சென்றுவிட்டார்.
1984 ஆம் ஆண்டில் ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் நிறுவனப் பொறுப்பு அடுத்த தலைமுறையினருக்கு சென்றது. ஹெச்.டி.வாசுதேவாவின் மகன் பிரம் வாசுதேவா தலைமைப் பொறுப்புக்கு வந்தார். 1968 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பிரம் வாசுதேவா பதவியேற்றார்.
பிரம் வாசுதேவா தலைமையில் ஹாக்கின்ஸ் நிறுவனம் புதிய பரிணாமத்தைப் பெற்றது. 1984இல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பின்னர் சிஇஓவாகவும் அவர் பதவி ஏற்றார்.
பிரம் வாசுதேவாவின் வழிமுறைகள் அவரது தந்தையைப் போலவே இருந்தது.
ஹெச்.டி.வாசுதேவாவின் கொள்கைகளை மாறாமல் பிரதிபலித்தது. அலைபாயாத ஈடுபாட்டுடன் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். இவரது இளமைக்காலத்தில் நாட்டின் பிரிவினை தந்த சோகங்கள் அவரை திடமான மனதுக்காரராக ஆக்கியிருந்தது. வளர்ச்சியின் உச்சியில் இருந்தபோதும் வாடிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தார்.
அவரது வழிகாட்டுதலில் ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் பெரும் வளர்ச்சியை அடைந்ததுடன் மேலும் மேலும் வளர்ந்து பல புதிய உற்பத்தியாலைகளையும் கண்டது. நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் முதல் பேக்கேஜிங் மற்றும் விளம்பரங்களிலும் தனிக் கவனம் செலுத்தப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சேவைக்கான முதல் தேசிய விருது, பேக்கேஜிங்குக்கான இந்திய ஸ்டார் விருது, சிறப்பான விளம்பரங்களுக்கான பெகாசஸ் விருது உள்பட பல்வேறு விருதுகளை ஹாக்கின்ஸ் வென்றது. 2006 ஏப்ரல் 25 ஆம் தேதியன்று ஹாக்கின்ஸ் குக்கர்ஸின் தலைவர் மற்றும் சிஇஓ பதவியிலிருந்து பிரம் வாசுதேவா ஓய்வு பெற்றார். அத்துடன் அவரது 38 ஆண்டுகால ஹாக்கின்ஸ் குக்கர்ஸுடனான பயணம் நிறைவுற்றது.
இது ஒன்றும் ஒரு முடிவல்ல. புதியதொரு அத்தியாயம். ஏப்ரல் 26ஆம் தேதியன்று நிறுவனத்தின் போர்டு ஆப் டைரக்டர்ஸின் நான்-எக்ஸிகியூட்டிவ் தலைவராக பொறுப்பேற்றார். நிறுவனத்தின் வளர்ச்சியில் இப்படியாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிரம் வாசுதேவா தலைமையில் ஹாக்கின்ஸ் குக்கர்ஸ், அனோடைஸ்டு சாஸ்பேன்கள், நான் ஸ்டிக் குக்வேர் தயாரிப்புகளில் இறங்கியது.
ஃபியூச்சுரா, மிஸ் மேரி, பிக்பாய் ஆகிய தயாரிப்புகள் எல்லாம் ஹாக்கின்ஸ் குக்கர்ஸின் உடமைகளாகும். அசுரத்தனமான மார்க்கெட்டிங்கின் தேவையை உணர்ந்த பிரம் சிறப்பான விளம்பர பிரசாரங்கள் மூலம் ஹாக்கின்ஸ் குக்கர்ஸை மிகப் பெரிய அளவுக்குக் கொண்டு சேர்த்தார்.
விடாமுயற்சி, புதுமை, சிறந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலமாக ஹாக்கின்ஸ் குக்கர்ஸ் நிறுவனம் ஹெச்.டி.வாசுதேவா, பிரம் வாசுதேவா தலைமையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகளாவிய பெருமையை படைத்துள்ளது. இது வளர்ந்து வரும் தலைமுறையினருக்கான சாதனை வழிகாட்டி.


Click it and Unblock the Notifications