தமிழ்நாட்டில் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக தர்மபுரி இருக்கிறது. தர்மபுரி மாவட்ட இளைஞர்கள் படிப்பை முடித்து பெங்களூரு, கோவை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு தான் வேலை தேடி செல்ல வேண்டி இருக்கிறது. இந்நிலையில் மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை.
தர்மபுரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரேசிலை சேர்ந்த உலகளாவிய மின் சாதனங்கள் மற்றும் தொழில்துறை ஆட்டோமேஷன் தயாரிப்பு நிறுவனமான WEG, ஆந்திரப் பிரதேசத்தின் குப்பம் பகுதிக்கு பதிலாக தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் தனது புதிய உற்பத்தி ஆலையை அமைக்க சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 3,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீட்டை கைப்பற்ற ஆந்திரப் பிரதேச அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது நிலையில் தமிழ்நாடு அரசு இந்த முதலீட்டை தட்டி தூக்கியுள்ளது. ஆந்திராவின் போட்டியை சமாளித்து, தர்மபுரியில் இந்த ஆலையை தமிழக அரசு தக்கவைத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலமாக தர்மபுரியில் பல நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். குறிப்பாக, உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதோடு, அவர்கள் வெளியூர்களுக்கு வேலை தேடி செல்வது தவிர்க்கப்படும். வளர்ந்த நகரங்களை தாண்டி, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள தர்மபுரி போன்ற மாவட்டங்களிலும் தொழில்துறையை வளர்க்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலையின் வருகையால், உதிரிபாகங்களை வழங்கும் சப்ளையர்கள் தர்மபுரி சுற்றியுள்ள பகுதிகளில் ஆலைகளை நிறுவுவார்கள். இது இப்பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு தொழில்களையும் மேம்படுத்தும்.1961இல் தொடங்கப்பட்ட பிரேசிலின் WEG நிறுவனம், தற்போது உலகளவில் 135 நாடுகளில் தனது வர்த்தகத்தை கொண்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தனது உற்பத்தி ஆலைகளை செயல்படுத்தி வருகிறது. 5 இடங்களில் தனது உற்பத்தி தளங்களை அமைத்து மின் மோட்டார்கள், ஜெனரேட்டர்கள், வோல்டேஜ் ரெகுலேட்டர்கள் போன்ற பல்வேறு தொழில்துறை மின் சாதனங்களை தயாரித்து வருகிறது.
முன்னதாக, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம், தமிழகத்தில் உள்ள ஒசூர் ஆலையை 650 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவுபடுத்துவதற்காக இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டத்தின் மூலம் 650 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்பட்டிருந்தது. தற்போது தர்மபுரியில் மேற்கொள்ளப்படும் இந்த புதிய மற்றும் மாபெரும் முதலீடு, தமிழகத்தில் இந்நிறுவனத்தின் வர்த்தகத்தை மேலும் பலமடங்கு விரிவுபடுத்தும்.
தமிழக தொழில் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இந்நிறுவன அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீட்டை ஆந்திராவுக்கு செல்லாமல் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். ஜூலை மாதம் முதலே இதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளதாக அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications

