இந்தியாவில் குயிக் காமர்ஸ் பிரிவில் செயல்பட்டு வரக்கூடிய பிளிங்கிட் நிறுவனம் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை என்ற ஒரு புதிய வசதியை கொண்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் ஏடிஎம் போன்ற ஒரு சேவையை தயவு செய்து கொண்டு வாருங்கள் என பிளிங்கிட் நிறுவனத்திற்கு பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
குயிக் காமர்ஸ் பிரிவில் நமக்கு தேவையான பொருட்களை பத்து நிமிடங்களுக்குள் டெலிவரி பெற்றுக் கொள்ளும் சேவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் செப்டோ, பிளிங்கிட் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த துறையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன.

அண்மையில் பிளிங்கிட் நிறுவனம் 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை என்ற ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனரும் யூடியூபருமான ஹர்ஷ் பஞ்சாபி என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஏடிஎம் சேவையை கொண்டு வாருங்கள் என கூறியுள்ளார்.
பிளிங்கிட் தலைமை செயல் அதிகாரி அல்பிந்தரை டேக் செய்து ஹர்ஷ் பஞ்சாபி வெளியிட்ட பதிவில் ஏடிஎம் போன்ற ஒரு சேவையை தயவு செய்து கொண்டு வாருங்கள், நாங்கள் யுபிஐ வாயிலாக உங்களுக்கு பணம் செலுத்தி விட்டால் நீங்கள் எங்களுக்கு 10 நிமிடங்களுக்குள் அதை ரொக்கமாக கையில் எடுத்து வந்து தந்துவிட வேண்டும். தற்போதைய சூழலில் அது மிகவும் வசதியானதாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரே முந்தைய பதிவில், ”நான் தற்போது ஒரு சுற்றுப்பயணத்திற்கு கிளம்ப இருக்கிறேன் .என்னிடம் ரொக்கமாக பணம் தேவைப்படுகிறது. ஆனால் கையிலோ தற்போது 100 ரூபாய் மட்டுமே இருக்கிறது. ஏடிஎம் சென்று பணம் எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு சோம்பேறித்தனமாக உள்ளது. யாராவது இதை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் ” என பதிவிட்டிருந்தார். அவருடைய இந்த ட்விட்டர் பதிவு பலரது கவனத்தையும் பெற்றிருந்தது.
ஒரு பயனர் இதற்கு நீங்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டி இருக்கும் பரவாயில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு பயனர் பிளிங்கிட் போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை இன்னும் இன்னும் சோம்பேறிகளாக மாற்றுகின்றன எனக் கூறியுள்ளார்.
எங்கு சென்றாலும் தான் யுபிஐ ஏற்றுக்கொள்ளப்படுகிறது நீங்கள் ஏன் கையில் ரொக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். கொஞ்ச நாள் போனால் எங்களுக்கு பதிலாக மூச்சு விடுங்கள் என்று கூட இந்தியர்கள் இது போன்ற செயலிகளிடம் கேட்கத் தொடங்கி விடுவார்கள் என ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications