இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ஐடிசி நிறுவனத்தில் அதிகளவிலான பங்குகளை வைத்துக்கொண்டு மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபேக்கோ (BAT) நிறுவனம் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஐடிசி நிறுவனத்தின் விரைவில் தனியாகப் பிரிந்து செல்ல உள்ள ஹோட்டல் பிரிவில் இருக்கும் தனது பங்குகளைப் பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபேக்கோ (BAT) நிறுவனம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. பேட் நிறுவனத்தின் சிஇஓ டேடியு மரோக்கோ, நிறுவனத்தின் நிதி நிலையின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்த, ஐடிசியில் உள்ள பங்குகளை விற்பனை செய்து அதன் மதிப்பை "அன்லாக்" செய்யும் வழிகளை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபேக்கோ (BAT) நிறுவனம் இந்தியாவில் தனது வாய்வழி புகையிலை பொருட்களை அதாவது Oral Tobacco பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதை ஐடிசி மூலமாகவோ அறிமுகம் செய்கிறதா அல்லது தனியாக அறிமுகம் செய்கிறதா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபேக்கோ நிறுவனம் தனியாக இந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினால், இந்தியாவில் ஏற்கனவே உள்ள துணை நிறுவனங்களுக்குத் தனியாக ஒழுங்குமுறை அனுமதிகள் தேவைப்படும். இதை எப்படி கையாளப்போகிறது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்தியாவில் புகையிலை பொருட்கள் மீது அதிகப்படியான ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி விதித்து வருகிறது.
ஐடிசி நிறுவனத்திலிருந்து ஐடிசி ஹோட்டல் வர்த்தகம் பிரிப்புக்குப் பிறகு, பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபேக்கோ (BAT) நிறுவனம் நேரடியாக 15.32% ஐடிசி ஹோட்டல் நிறுவனத்தில் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக வைத்திருக்கும். இதில் ஐடிசியின் ப்ரோமோட்டர் குழுமம் 39.93% பங்குகளை வைத்திருக்கும். ஐடிசியின் ஹோட்டல் வர்த்தக பிரிப்புத் திட்டம் அக்டோபர் 4 அன்று தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
ஐடிசி இந்த நிதியாண்டில் ஐடிசி ஹோட்டல் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் என்று முன்னரே கூறியிருந்தது. ஐடிசி சிகரெட், காகிதம், பேக்கேஜிங் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதன்மையான நிறுவனமாக இருக்கும் வேளையில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமாக விளங்குகிறது.


Click it and Unblock the Notifications