பண மதிப்பு நீக்கம் என்றாலே இந்திய மக்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றி விடும். ஏனெனில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தது. கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நாட்டில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீங்க நடவடிக்கை இந்திய மக்களை குறிப்பாக சாமானிய மக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளும் திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது.

தற்போது இந்தியாவில் 500 ரூபாய் ,200 ரூபாய் , 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கின்றன. இந்த சூழலில் மீண்டும் ஒரு பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கப் போகிறதா என்ற கவலை எழுந்து இருக்கிறது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச பங்குச் சந்தை தரகு நிறுவனமான பெர்ன்ஸ்டைன் ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. அதில் இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும் பணத்தை அடிப்படையாகக் கொண்ட முறைசாரா நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
அதாவது இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரிய அளவிலான வளர்ச்சி இருந்தாலும் முறைசாரா பரிவர்த்தனைகளும் அதிகப்படியான பணப் பயன்பாடும் தொடர்வதால் வெளிப்படை தன்மை குறைகிறது என கூறி இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும் என்றால் அரசு மக்கள் கைகளில் ரொக்கமாக பணத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது.
அதாவது பெர்ன்ஸ்டைன் நிறுவனம் மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையை தந்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை படிப்படியாக புழக்கத்தில் இருந்து குறைக்க வேண்டும் என கூறுகிறது. வெறும் பத்து ரூபாய் நோட்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் மற்ற அனைத்து மதிப்பு ரூபாய் நோட்டுகளையும் படிப்படியாக நீக்க வேண்டும் என பரிந்துரை செய்திருக்கும் அந்த நிறுவனம் இதன் மூலம் பெரிய அளவிலான ரொக்க பரிவர்த்தனைகள் அதாவது மக்கள் பணமாக கொடுத்து பரிவர்த்தனை செய்வது குறைந்து டிஜிட்டல் ரீதியிலான பரிவர்த்தனைகள் அதிகரிக்கும், இது இன்னும் வெளிப்படை தன்மை கொண்டதாக இந்திய பொருளாதாரத்தை மாற்றும் எனக் கூறியிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர்தான் பெரிய அளவிலான டிஜிட்டல் பணப்பரிமாற்ற முறையே புழக்கத்திற்கு வந்தது. இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் யுபிஐ தொழில்நுட்பம் பரவுவதற்கு இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஒரு காரணமாக இருந்தது. இந்நிலையில் தான் பெர்ன்ஸ்டைன் நிறுவனம் உயர் மதிப்பு கொண்டு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என பரிந்துரை செய்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறது.


Click it and Unblock the Notifications

