டெல்லி: கடந்த 2018 - 19ம் நிதியாண்டில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், என்டிபிசி உள்ளிட்ட நிறுவனங்கள், முதல் மூன்று லாபகரமான பொதுத்துறை நிறுவனங்களாக இருந்துள்ளன.
இதே நேரம் பிஎஸ்என்எல், ஏர் இந்தியா, எம்டிஎன்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக நஷ்டத்தினை கண்ட பொதுத்துறை நிறுவனங்களாக உள்ளன. அதிலும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டில் நஷ்டத்தினை கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் வருடாந்திர நிதி செயல்திறனை கணக்கிடும் The Public Enterprises Survey 2018-19யில் தெரிய வந்துள்ளது.
லாபத்தில் உள்ள நிறுவனங்கள்
இந்த அறிக்கையில் லாபகரமான நிறுவனங்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த பொதுத்துறை நிறுவனங்களில், ஆயில் அன்ட் நேச்சுரல் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்டிபிசி ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் கடந்த 2017 - 2018ல் லாபம் ஈட்டிய சில பொதுத்துறை நிறுவனங்கள், 2018 - 19ல் நஷ்டம் ஈட்டியுள்ளன.
நஷ்டத்துக்கு திரும்பிய நிறுவனங்கள்
குறிப்பாக ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, எம்.எஸ்.டி.சி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த லிஸ்டில் சேர்ந்துள்ளன. மேலும் இந்த நிறுவனங்கள் முதல் பத்து நஷ்டம் கண்ட நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
லாபம் அதிகரிப்பு
பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் போவது அதிகரித்தாலும், மொத்தமாக பார்க்கும் போது நல்ல லாபம் ஈட்டும் நிறுவனங்களின் செயல் திறன்கள் அதிகரித்ததால், ஒட்டு மொத்த வருவாயானது உச்சம் தொட்டுள்ளது. இது கடந்த 2018 - 19ல் 24,40,748 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே 2017 - 18ல் 20,32,001 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு கிடைத்த வருமானம்
இதே கலால் வரி, சுங்க வரி, ஜிஎஸ்டி வரி, கார்ப்பரேட் வரி, மத்திய அரசு கடன்களுக்கான வட்டி, ஈவுத்தொகை மற்றும் பிறவற்றின் மூலம் மத்திய கருவூலத்திற்கு 2018-19 ம் ஆண்டில் 3,68,803 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது முந்தைய 2017 - 18ல் 3,52,361 கோடி ரூபாயாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சுமார் 4.67% அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications