அரசுக்கு சொந்தமான தொலை தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு மாத காலத்திற்கு இலவச 4ஜி சேவை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் தற்போது 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தியாவில் தொலைதொடர்பு சேவையில் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய சூழலில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க புது புது சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.

சமீப காலமாக தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நோக்கி படையெடுத்து வருகின்றனர் . அந்த வகையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக பிஎஸ்என்எல் நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு ஒரு புதிய ஆஃபரை அறிமுகம் செய்திருக்கிறது.
இதன்படி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை இந்த ஒரு மாத காலத்தில் புதிதாக பிஎஸ்என்எல்-இல் இணையும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4ஜி சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது பிஎஸ்என்எல் உடன் இணையக்கூடிய புதிய வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்தாமல் ஒரு மாத காலத்திற்கு இலவசமாக 4ஜி சேவைகளை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சலுகை தருவதாக பிஎஸ்என்எல் தெரிவித்திருக்கிறது .
இதன்படி பிஎஸ்என்எல் உடன் புதிதாக இணையக்கூடிய வாடிக்கையாளர்கள் முதல் ஒரு மாத காலத்திற்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் பெறுவார்கள், ஒரு நாளைக்கு 2 ஜிபி ஹை ஸ்பீடு டேட்டா பெறுவார்கள் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு இலவச சிம்கார்டு ஆகியவை கிடைக்கும் . மேலும் எங்கெல்லாம் 4ஜி சேவைகள் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அன்லிமிடெட் 4ஜி சேவைகளை அவர்களால் பெற முடியும். இதற்கு அவர்கள் 1 ரூபாய் கட்டணமாக செலுத்தினால் போதும்.
இந்த தீபாவளி சலுகை தங்களுக்கு புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வரும் என பிஎஸ்என்எல் நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இப்படித்தான் பிஎஸ்என்எல் நிறுவனம் இதே போன்ற ஒரு சலுகையை அறிவித்தது. இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.38 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கிடைத்தனர். ஆகஸ்ட் மாதத்தில் ஜியோ நிறுவனத்துக்கு அடுத்ததாக அதிகமான புதிய வாடிக்கையாளர்களை பெற்ற இரண்டாவது நிறுவனம் என்ற இடத்தை பிடித்தது பிஎஸ்என்எல். ஏர்டெல் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.


Click it and Unblock the Notifications