சமீபத்தில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் எந்தவித கட்டண உயர்வும் அறிவிக்காத BSNL ஆப்பரேட்டருக்கு பலரும் மாறி வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் BSNL நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) அறிக்கையின் படி, அரசுக்கு சொந்தமான தொலை தொடர்பு சேவை வழங்குனரான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், 2024-ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

தொடர்ந்து 3-வது மாதமாக BSNL அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. BSNL நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 91.89 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. இதனால் சந்தை பங்கு 7.98 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஜூலை மாதத்தில் 2.94 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களையும் BSNL பெற்றது.
இதற்கிடையில் தனியார் தொலைதொடர்பு சேவை வழங்குனார்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் தாங்கள் அறிவித்த கட்டண உயர்வை தொடர்ந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் இந்த மூன்று தனியார் நிறுவனங்களும் 25 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்தனர். இதன் விளைவாக இந்த 3 நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணம் உயர்வை அறிவித்த மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றனர்.
TRAI-யின் கூற்றுப்படி செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த 3 நிறுவனங்களும் 10 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. அவர்களில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 7.9 மில்லியன் வாடிக்கையாளர்களை செப்டம்பர் மாதத்தில் இழந்தது. அதேபோல பார்தி ஏர்டெல் 1.4 மில்லியனும், வோடபோன் ஐடியா 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.
இந்த இழப்பின் காரணமாக ஜியோ நிறுவனத்தின் சந்தை பங்கு 40.20 சதவீதமாகவும், பார்தி ஏர்டெல்-லின் சந்தை பங்கு 33.24 சதவீதமாகவும், வோடபோன் ஐடியாவின் சந்தை பங்கு 18.41 சதவீதமாகவும் உள்ளது. ஜியோ நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் 4 மில்லியன் வாடிக்கையாளர்களையும், பார்தி ஏர்டெல் 2.4 மில்லியன் வாடிக்கையாளர்களையும், வோடபோன் ஐடியா 1.87 மில்லியன் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
செப்டம்பர் மாதத்தில் தங்கள் மொபைல் நம்பரை மாற்றுவதற்காக 13.32 மில்லியன் கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 7.48 மில்லியன் புதிய கோரிக்கைகள் வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ள நபர்களால் செய்யப்பட்டுள்ளது. மேலும் 5.8 மில்லியன் கோரிக்கைகள் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த நபர்களால் செய்யப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் கடுமையான போட்டியின் நிலவிக் கொண்டிருக்கிறது. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்ததனால் மக்கள் பலரும் தங்களுக்கு ஏற்ற திட்டங்களை வழங்கும் அரசு நிறுவனமான BSNL-க்கு மாறி வரும் போக்கு தொடர்கிறது. இனிவரும் நாட்களிலும் இதே நிலை தொடருமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications