புத்தாண்டையொட்டி இரண்டு புதிய ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு சேவை நிறுவனம் தான் பிஎஸ்என்எல்.
தற்போது இந்தியாவில் தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துபவையாக இருக்கும் நிலையில் அந்த இடத்தை பிடிப்பதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டி போட்டுக் கொண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் 215 ரூபாய் மற்றும் 628 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புதிய ப்ரீபெய்டு திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. அன்லிமிடெட் காலிங், இலவச எஸ்எம்எஸ், மற்றும் அதிவேக டேட்டா வசதிகளுடன் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 215 ரூபாய் மதிப்பிலான ப்ரீபெய்டு திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வரை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது ஒரு மாதத்திற்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி காலிங் வசதி இருக்கிறது. ஸிங் மியூசிக், பிஎஸ்என்எல் டியூன்ஸ் உள்ளிட்ட சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்ததாக 628 ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாவது புதிய ப்ரீபெய்டு திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள். இதில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும். இந்த 84 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக இந்த திட்டத்தில் 252 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பிக் கொள்ளலாம். இத்துடன் ஸிங் மியூசிக், பிஎஸ்என்எல் டியூன்ஸ் சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது சந்தையில் முன்னணியில் இருக்கக்கூடிய ஜியோ , ஏர்டெல் நிறுவனங்களை ஒப்பிடும்போது இத்தகைய அதிக சேவைகளை குறைந்த கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. அண்மையில் கூட பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவின் முதல் டைரக்ட் டு மொபைல் சேவையான பிஐ டிவி என்ற சேவையை அறிமுகம் செய்தது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய மொபைல் டிவைஸ்களில் பிஐ டிவி செயலி வாயிலாக 300 தொலைக்காட்சி சேனல்களை நேரலையில் இலவசமாக கண்டு ரசிக்க முடியும்.
தனியார் நிறுவனங்கள் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணங்களை கடந்த ஜூலை மாதம் உயர்த்தின. இதனால் லட்சக்கணக்கானவர்கள் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறினர். புதிதாக வந்த வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications