அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய சிம் கார்ட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி வெறும் 1 ரூபாய் செலுத்தி புதிய BSNL சிம் கார்டை வாங்கலாம். இந்த சலுகை ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்டம்பர் 12 வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து தங்களுடைய ரீசார்ஜ் திட்டங்களுக்கும் சில ஆஃபர்களை அறிவித்துள்ளது.
சமீப காலமாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, ஏர்டெல் நிறுவனம் தங்களுடைய குறைந்தபட்ச ரீசார்ஜ் பிளானான ரூ.299-ஐ நீக்கிவிட்டு, ரூ.349-ஐ குறைந்தபட்ச பிளானாக அறிவித்தது.

இது போன்ற சூழலில் இப்படி ஒரு சலுகையை அறிவித்துள்ளது BSNL நிறுவனம். அதுமட்டுமல்ல விரைவில் 1 லட்சம் 4ஜி டவர்களை அமைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இதில் ஏற்கனவே 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
பிஎஸ்என்எல் வழங்கும் பிற ஆஃபர்கள் என்னென்ன?:
ரூ. 2,399 ரீசார்ஜ் பிளான்: சுமார் 412 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த சிறப்பு பிளானையும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதோடு FTTH பிராட் பேண்ட் பைபர் கனெக்ஷன் பெரும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மாத வாடகை முற்றிலும் இலவசம் என்றும் அறிவித்துள்ளது.
கூடுதலாக BSNL பார்கோட் வசதியையும் அறிமுகம் செய்திருக்கிறது. லேண்ட்லைன் பெற விரும்புபவர்கள் இந்த பார்கோடை ஸ்கேன் செய்து உங்களுடைய சுய விபரங்களை அப்லோட் செய்தால் போதும். வெறும் 3 மணி நேரத்திற்குள் லேண்ட்லைன் கனெக்சன் வழங்கப்படும்.
ரூ.1.12 லட்சத்திற்கு புதிய சாட்டிலைட் போன்: BSNL நிறுவனம் தங்களுடைய 4ஜி டவர்களை விரிவுபடுத்தி வருகிறது. இந்த சூழலில் டவர் இல்லாவிட்டாலும் இயங்கக்கூடிய சாட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் மெசேஜ் அனுப்பலாம், கால் பேசலாம். இந்த போனை பெறுவதற்கு ஆகஸ்ட் 15 முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.1.12 லட்சம்.
சாதாரண போனுக்கு எப்படி ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ? அதேபோல இதற்கும் ரீசார்ஜ் கட்டணங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஏற்ப இந்த கட்டணம் அறிவிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் கூறியுள்ளது.
சாட்டிலைட் போன் மூலம் வேறு ஃபோன்களுக்கு தொடர்பு கொள்ள முடியுமா? என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம். நீங்கள் பிற மொபைல் போன்களுக்கும் கால் பேச முடியும். சிக்னல் இல்லாத பகுதிகளில் வசிப்பவர்கள், அடர்ந்த காடுகளில் இருப்பவர்கள், கடல் பகுதிக்குச் சென்று வருபவர்களுக்கு இந்த போன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில விதிகளைப் பின்பற்றி தான் சாட்டிலைட் போனை வாங்க முடியும்.
உள்துறை அமைச்சகத்தின் மூலம் போலீஸ் வெரிஃபிகேஷன் முடிந்த பிறகே சாட்டிலைட் போனை வாங்க முடியும். ஆனால் இந்த போனை வாங்குபவர்கள் எதற்காக போனை பயன்படுத்துகிறீர்கள்?, எவ்வளவு நாட்கள் பயன்படுத்துவீர்கள்?, எந்த இடத்தில் பயன்படுத்துகிறீர்கள்? என்ற அனைத்து விவரங்களையும் கட்டாயம் வழங்க வேண்டும்.
யாருக்கு சாட்டிலைட் போன் ஏற்றது?: ராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர் போன்ற பாதுகாப்பு துறையில் பணிபுரிபவர்கள், பேரிடர் மேலாண்மை குழுக்கள், கப்பல் துறையில் பணிபுரிபவர்கள், சாகச பயணங்களில் ஈடுபடுபவர்கள் இந்த போனை பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications
