இந்தியாவில் இணைய பயன்பாடும், இணைய வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியிருக்கையில் 5ஜி சேவையில் தனியார் நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மட்டுமே இதில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக 5ஜி சேவை பிரிவில் அரசு நிறுவனமான BSNL களத்தில் இறங்கியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக 100% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருவி மூலம் 5ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. இதில் வியப்படையும் விஷயம் என்னவென்றால் ஏர்டெல், ஜியோ கருவிகள் போல் இல்லாமல் BSNL-ன் கருவி சிம்-இல்லாமலேயே வயர்லெஸ் மூலம் 5G சேவையை வழங்க உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஒரு காலத்தில் இந்தியாவில் டெலிகாம் சேவையிலும், இண்டர்நெட் சேவையிலும் கொடிக்கட்டி பறந்து வந்த நிலையில், தனியார் துறையின் ஆதிக்கம் காரணமாக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியது.
மத்திய அரசின் தொடர் நிதியுதவியும், பல கட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் வாயிலாகவும், டிசிஎஸ் மூலம் கிடைக்க தொழில்நுட்ப உதவிகள் மூலம் BSNL தற்போது 4ஜி சேவையை தொடர்ந்து "குவாண்டம் 5ஜி எஃப்டபிள்யுஏ" சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த "குவாண்டம் 5ஜி FWA" சேவையை ஹைதராபாத்தில் முதல் முறையாக சோதிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த புதிய தொழில்நுட்பம், வீடுகள், MSME நிறுவனங்கள், ஸ்மார்ட் தொழிற்சாலைகளுக்கு அதிவேக இணையத்தை வழங்குகிறது.
குவாண்டம் 5ஜி அறிமுகம்:
ஹைதராபாத்தின் அமீர்பேட்டில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த சேவை 980 Mbps டவுன்லோடு வேகம், 140 Mbps அப்லோடு வேகம், மற்றும் 10 மைக்ரோ நொடிக்கும் குறைவான தாமதத்தை (latency) பதிவு செய்தது. இது அல்ட்ரா-ஹை-டெஃபினிஷன் (UHD) ஸ்ட்ரீமிங், கிளவுட் கேமிங், மற்றும் ஹைப்ரிட் பணியாளர்களுக்கு ஏற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
BSNL உருவாக்கியுள்ள கருவியில் சிம் அல்லாத காரணத்தால், இதை ஆன் செய்யப்பட்ட உடன் மொபைல் நெட்வொர்க் மூலம் சப்ஸ்கிரைபர்களை உறுதி செய்த உடன் பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க்கில் தானாக இணைக்கப்படும். இதற்கு எவ்விதமான கேபிள் இணைப்பும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் இந்த சேவையை தற்போது ஹைதராபாத்-ல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 2025-க்குள் பெங்களூரு, புதுச்சேரி, விசாகப்பட்டினம், புனே, குவாலியர், மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் சோதனைகளை விரிவாக்க உள்ளது.

குவாண்டம் 5ஜி FWA அறிமுக கட்டணங்கள்:
ரூ.99: 100 Mbps வேக சேவை.
ரூ.1,499: 300 Mbps வேக சேவை.
இந்த கட்டணங்கள், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுடன் சற்று குறைவாக போட்டியிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் இருக்கும் மக்களை குறிவைத்து குவாண்டம் 5ஜி FWA சேவையை அறிமுகம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications