இன்றைய பட்ஜெட் தாக்கல் அறிக்கையில் மிக பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ஆனால் கார்ப்பரேட்களுக்கான கூடுதல் வரி 12%ல் இருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இது உண்மையில் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது.
முதலில் கார்ப்பரேட் கூடுதல் வரி என்றால் என்ன? இது எந்தளவுக்கு பயனுள்ள ஒன்றாக இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.
கூடுதல் வரி குறைப்பு
கார்ப்பரேட்களுக்கான கூடுதல் வரியானது உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வருமானம் 1 கோடி ரூபாய்க்கு அதிகமாகவும், 10 கோடி ரூபாய்க்குள்ளும் இருக்கும்போதும், 7%மும், இதே 10 கோடி ரூபாய்க்கு மேலாக வருமானம் செல்லும்போது 12%மும் கூடுதல் வரியாக விதிக்கப்பட்டு வந்தது. இந்த வரியினைத் தான் பட்ஜெட்டில் 12%ல் இருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கவனிக்க வேண்டிய விஷயம்
ஆக கார்ப்பரேட்டுகளை பொறுத்தவரையில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கே இந்த வரி குறைப்பு என்பது பயனுள்ளதாக இருக்கும். சிறு நிறுவனங்களுக்கும், MSME நிறுவனங்களுக்கும் ஏதும் பயன் இல்லை எனலாம். இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், 10 கோடி ரூபாய்க்கு மேலான வருமானம் ஈட்டும் நிறுவனங்களின், வருமான வரி + கூடுதல் வரியானது 10 கோடி ரூபாயை தாண்டினால் கூடுதல் வரி விதிக்கப்படாது என்பதும் நினைவு கூறத்தக்கது.
யாருக்கு பயன்
இந்த சலுகையானது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருந்தாது எனலாம். ஆக மொத்தத்தில் இந்தியாவினை சேர்ந்த மிகப்பெரிய அளவிலான வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த சலுகையானது கிடைக்கும். இதன் மூலம் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பயனடைய முடியும். நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது.
ஏமாற்றம் தந்த பட்ஜெட்
மொத்தத்தில் இது சாமானிய மக்களுக்கும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் வருமான வரியை குறைப்பது தேவையை அதிகரிக்க மிக பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்ட நிலையில், அப்படி ஏதும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. அதே சமயம் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் வருமான வரி செலுத்தி வரும் கார்ப்பரேட்களுக்கே சலுகை அளிக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் தருவதாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications