வரி செலுத்துவதை குறைப்பதற்கான முதலீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை, ஈக்விட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்கள் (ELSS) தான் தற்போது சிறந்த தேர்வாக இருக்கிறது. ஏனெனில், இந்த திட்டங்கள் வருமான வரி சட்டம், பிரிவு 80C-இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை வழங்குகின்றன. ஆனால், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் (AMFI) 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசிடம் மேலும் சில கோரிக்கைகளை வைத்துள்ளது.
அதன்படி, தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) போன்றே பிற வரிச் சலுகைகளுடன் கூடிய ஓய்வூதிய திட்டங்களை வழங்க அனுமதி தர வேண்டும் என்பதே AMFI-இன் முக்கியமான கோரிக்கையாக உள்ளது. இந்த திட்டங்கள் மியூச்சுவல் ஃபண்ட் லிங்க்டு ரிடையர்மெண்ட் ஸ்கீம் (MFLRS) என்று அழைக்கப்படுகின்றன.

AMFI, நிதி அமைச்சகத்திற்கு 16 விதமான கோரிக்கைகளைக் கொண்ட கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளது. இது NPS மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளால் தொடங்கப்பட்ட ஓய்வூதியம் சார்ந்த திட்டங்களுக்கான வரி சலுகையைப் பிரிவு 80CCD-இன் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த மனு வழங்கப்பட்டுள்ளது.
சில்லறை முதலீட்டாளர்களின் நீண்ட கால சேமிப்பை பாதுகாக்கும் வகையில் சிறந்த வரிச் சலுகைகளை தரவும் AMFI கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி ஈக்கிவிட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்களுக்கு எப்படி ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் கிடைக்கிறதோ? அதேபோல டெப்ட் லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்களுக்கும் (DLSS) வரிச்சலுகைகள் தரப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றனர்.
பொதுவாக பங்குகளை வாங்கி விற்று லாபம் பெரும் போது அதன் மீது வரி செலுத்த வேண்டி இருக்கும். தற்போது இந்த வரி தொகையில் கொஞ்சம் மாற்றங்களை AMFI எதிர்பார்க்கிறது. அதாவது லாபத்திற்கு கொஞ்சம் குறைவான வரியை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
குறைந்த காலத்திற்கு முதலீடு செய்வதை விட 3 ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு குறைவான வரி விதிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது எவ்வளவு நீண்ட காலமாக ஒருவர் முதலீடு செய்தாலும், அதிகபட்ச வரியை செலுத்த வேண்டியுள்ளது. இந்த வரி விதிப்புகளில் மாற்றத்தை AMFI அரசிடம் கோரியுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியானால் நீண்ட காலமாக முதலீடு செய்து கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
மொத்தத்தில், ஓய்வூதிய காலத்தை நிம்மதியாகக் கழிப்பதற்கும், மக்களை நீண்ட கால சேமிப்பை நோக்கி நகர்த்தவும் AMFI சில மாற்றங்களை எதிர்பார்க்கிறது. எனவே, இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து ஏற்றுக்கொள்ளுமா? என்று தெரிந்து கொள்ள பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications