பெங்களூரு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில், வரி விதிப்பு முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மோடி தலைமையிலான மத்திய அரசு புதிய வரி முறையை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாலும், அதிகப்படியான மக்கள் பழைய முறையை நாடுகின்றனர்.
இந்த பட்ஜெட்டில் புதிய வரி முறை சில பிரிவினருக்குக் கட்டாயமாக்க வேண்டும் எனத் திட்டத்துடன் மத்திய அரசு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் இது மக்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்ப்பு இருக்கும் என்பது முன்பே கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.

இப்படியிருக்கையில் தற்போதுள்ள பழைய வரி விதிப்பு முறையைத் தொடர்வது என்றால், சில வரி விதிப்பு சலுகைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று, பெங்களூருவை 'மெட்ரோ நகரம்' என அறிவித்து, வீட்டு வாடகை கொடுப்பனவில் (HRA) வரிவிலக்கு சலுகையை அதிகரிக்க வேண்டும் என்பதே.
தற்போது, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும், மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிப்பவர்களுக்கும் HRA மாறுபடும்.
பொதுவாக மெட்ரோ நகரங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில், அடிப்படை சம்பளத்தில் (Basic salary) சுமார் 50 சதவீதத்தை HRA பிரிவில் வரி விலக்கு பெற முடியும், இதுவே மெட்ரோ அல்லாத நகரங்களில் அடிப்படை சம்பளத்தில் சுமார் 40 சதவீதத்தை HRA பிரிவில் வரி விலக்கு மட்டுமே பெற முடிகிறது. நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் நகரமான பெங்களூரு இன்னும் 'மெட்ரோ நகரம்' என அங்கீகரிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு, தேசிய தலைநகர் பகுதி (NCR), புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை 'மெட்ரோ நகரம்' என அறிவிப்பதன் மூலம், இந்நகரங்களில் வசிக்கும் பெரும்பான்மையான மாத சம்பளக்காரர்கள் வரி விதிப்பு சுமை குறைத்து நன்மை அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வரி விதிப்பு நிபுணர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பெங்களூரு போன்ற நகரங்களில் வாடகை பெரிய அளவில் உயர்ந்து வருவதால், HRA வரிவிலக்கை அதிகரிப்பது அவசியம் என்றும், இதன் மூலம் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்றும் நீண்ட காலமாகக் கருத்து நிலவுகிறது. வருகின்ற பட்ஜெட்டில் இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருக்கும் முக்கிய நகரங்களில் பெங்களூரு எவ்விதமான சந்தேகத்திற்கு இடமின்றி, இன்றைய நவீன உலகளாவிய பெருநகரத்தின் அனைத்து அம்சங்களைக் கொண்டுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் ஐடி நகரம் என்ற தனிப் பெருமையைக் கொண்டு உள்ளது பெங்களூர்.
பெங்களூர் காஸ்மோபாலிட்டன் கலாச்சாரம், உயர்தர உள்கட்டமைப்பு, போக்குவரத்துச் சேவைகள், அதிகப்படியான மக்கள் தொகை ஆகியவை இருப்பினும் மெட்ரோ நகரமாக வருமான வரி சட்டத்தின் கீழ் அங்கிகாரம் பெறவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications